இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாஸ் அம்மையாரை நியமித்துள்ளதாக இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் ஆணையாளர் நேற்றிரவு அறிவித்துள்ளார்.
குழுவின் இணைப்பாளரான பெய்டாஸ் அம்மையாரை ஜெனீவாவில் இருக்கும் இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியான ரவிநாத் ஆரியசிங்கவுக்கு ஐ.நா. விரைவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விசாரணைக் குழுவைத் தெரிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் இவ் பணி எதிர்வரும்10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடருக்கு முன்னதாக இறுதி செய்யப்படும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஆதாரம் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணைகள் பத்து மாதங்களில் நிறைவடையும் என்றும் வரும் ஜூலைக்கும், நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்த விசாரணைக் குழு இலங்கைக்குப் பயணங்களை மேற்கொள்ளும் என்றும் தெரிய வந்துள்ளது.
இது இவ்வாறிருக்க இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என அரசின் முக்கிய பிரமுகர்கள் சிலர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த சன்ட்ரா பெய்டாஸ்?
ஐ.நா வட்டாரங்களில் மிகவும் பிரபலமான மனித உரிமை நிபுணராவார்.
பிரித்தானியப் பெண்மணியான இவர், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.
இவர் ஆரம்பத்தில், நியுயோர்க்கைத் தளமாக கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் பணியாற்றியிருந்தார்.
பின்னர், ஐ.நாவில் இணைந்த இவர், மூத்த மனிதஉரிமை அதிகாரியாகப் பணியாற்றினார்.
சோமாலியா, தென்சூடான் ஆகிய நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், அனுப்பப்பட்டவர்.
தென்சூடானில் பாதுகாப்புப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக, சன்ட்ரா பெய்டாஸ் அம்மையாரை கடந்த 2012ம் அண்டு நொவம்பர் மாதம் தென் சூடான் அரசாங்கம் 48 மணிநேர காலக்கெடு கொடுத்து அங்கிருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.