Ad Widget

ஐ.நாவில் கால அவகாசம் வழங்க கூட்டமைப்பு முனைப்புக் காட்டுவதற்கு சலுகைகள்தான் காரணம்: விக்னேஸ்வரன்

“அரசுக்கு அனுசரணை வழங்குவதால் கிடைத்துள்ள செல்வச் செழிப்புக் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மயங்கியுள்ளது. அதனாலேயே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அரசுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றார்கள்”

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகத்தால் வாரந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பிரேரணையை நடைமுறைப்படுத்த 4 வருடங்களாக அரசு முன்வரவில்லை. மாறாக நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று உயர் பதவிகளில் உள்ளோர் கூறியுள்ளார்கள்.

இலங்கை ஏதாவதொரு கடப்பாட்டை நடைமுறைப்படுத்த முன்வந்தால்தான் சர்வதேசக் கண்காணிப்பு இடம்பெறும். முன்வராவிட்டால் கால அவகாசம் வழங்குவதால் வரும் இலாபம் என்ன?

கொடூரமான கொலையாளிகளைத் தமது துணிச்சல் மிக்க வீரர்கள் என்று தொடர்ந்து வரும் இலங்கை அரசுகள் அடையாளப்படுத்தும் வரை எந்த ஒரு பிரேரணையின் நடைமுறைப்படுத்தலும் நடைபெறாது.

கால அவகாசம் கொடுத்தாலும் அது நடைபெறாது. சவேந்திர சில்வாவுக்கு அதியுயர் இராணுவ பதவி கொடுத்திருப்பதில் இருந்து இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு வருடக் காலக்கெடு 2017ஆம் ஆண்டு கொடுத்தபோது அடுத்த இரு வருடங்களில் எதுவும் நடைபெறாது என்று அமெரிக்க உயர் அதிகாரி நிசா பிஸ்வாலுக்கு கூறினேன்.

“இல்லை! பிரேரணையை நடைமுறைப்படுத்தவே கால அவகாசம் கொடுக்கின்றோம்” என்றார். “நீங்கள் அவ்வாறு கூறிவிட்டு கால அவகாசம் கொடுத்துவிட்டுப் போய் விடுவீர்கள். இலங்கை அரசை நடைமுறைப்படுத்த வைக்க யார் வருவார்கள்?” என்று கேட்டேன்.

“நாங்கள் உங்களுடன்தான் எப்பொழுதும் இருப்போம்” என்று தமிழர்களின் நலனைத் தாமும் நாடுவதாகக் கூறினார்.

இன்று என்ன நடந்துள்ளது? அமெரிக்கா எங்கே? அவர்கள் பின்னால் இருப்பதாகக் கூறினாலும் முன்னால் வரமுடியாமலேயே அவர்கள் பின்னால் இருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கேற்பட்ட உயிரழிவை கொடூரத்தை வரவேற்றவர்கள் இலங்கை அரசினர். இன்றும் கொலையாளிகளைத் தூக்கி வைத்தே பேசுகின்றார்கள்.

அத்துடன் அன்றிருந்தவர்களிடையே பசிலைவிட கோத்தபாயாவுக்கே ஆதரவு இன்றும் அதிகம். அந்த விதத்தில் பெரும்பான்மை சிங்கள மக்களும் போர்க் குற்றங்களாவன குற்றங்கள் அல்ல. அவை எமது போர் வீரர்களின்
துணிச்சல் மிக்க வீரமே என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள்.

ஆகவே யார் பிரேரணையை நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள்? கால அவகாசம் என்னத்தைப் புதிதாக
இயற்றித் தரப் போகின்றது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிகாரத்தால் அதன் வழிவந்த செல்வச் செழிப்பால் அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள்.

கால அவகாசம் கொடுத்தால் தமக்கு அதுவரை நல்ல காலம் என்ற நோக்கில் கால அவகாசத்தை சிபார்சு செய்யலாம். தேர்தலில் நிற்காமலேயே அவர்கள் சிலருக்கு போனஸ் ஆசனங்கள் காத்திருப்பன.

எம்மால் அது முடியாது. தமிழர்களை இனியும் ஏமாற்றிக்கொண்டிருக்க எம்மால் முடியாமல் இருக்கின்றது.

ஜெனிவாவில் ஒரு முகம் இலங்கையில் ஒரு முகம் காட்டுகின்றது இலங்கை அரசு. அத்துடன் தமக்குள்ளேயே
வெவ்வேறு முகங்களையும் காட்டி வருகின்றனர்.

சுயநல காரணங்களுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு வக்காலத்து வாங்குகின்றது. முழுமையான உண்மையான விசாரணை இடம் பெற்று நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தினூடாகவே எமது மக்களுக்கு நியாயம் கிடைக்கும் நீதி கிடைக்கும். நடந்த கொடூரங்களைக் காலக்கெடு கொடுத்து மறைத்து விடவா ஐக்கிய நாடுகள் இருக்கின்றது? ஏற்கனவே 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. கால அவகாசம் எதற்கு? – என்றுள்ளது.

Related Posts