எம்.எச். 370 விமானத்தில் பயணித்த பயணிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் திருட்டு

காணாமல் போன மலேசிய எம்.எச். 370 விமானத்தில் பயணித்த 4 பயணிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து 30,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை திருடிய குற்றச்சாட்டில் மலேசிய பெண் வங்கி உத்தியோகத்தரொருவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

plane-malaysia-mh370

எம்.எச். 370 விமானம் காணாமல் போய் ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் அந்த விமானத்தில் பயணித்த இரு மலேசிய பயணிகளதும் இரு சீன பயணிகளதும் வங்கிக் கணக்குகளிலிருந்து மேற்படி பணம் மர்மமான முறையில் திரும்பப் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மலேசிய கோலாலம்பூர் நகரில் செயற்பட்டு வந்த எச்.எஸ்.பி.சி. வங்கிக் கிளையின் முகாமையாளர் விமான பயணிகளது கணக்குகளிலிருந்து பணம் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் செய்த முறைப்பாட்டையடுத்து அந்த வங்கியில் பணியாற்றிய 33 வயது பெண் உத்தியோகத்தரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பெண் உத்தியோகத்தர் குறிப்பிட்ட வங்கியில் 10 வருட காலமாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த திருட்டுடன் தொடர்புடைய பாகிஸ்தானை சேர்ந்த பிறிதொரு சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வங்கி சி.சி.ரி.வி. வீடியோ கருவி மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலமே சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேசமயம் குறிப்பிட்ட பாகிஸ்தானிய சந்தேக நபர் அந்த விமானத்தில் பயணித்த நான்காவது பயணியொருவரின் கணக்கிலிருந்து பல்வேறு தன்னியக்க பண இயந்திரங்களினூடாக பணத்தை திருடியுள்ளதாக கூறப்படுகிறது.

மலேசிய எம்.எச். 370 விமானம் கடந்த மார்ச் 8ஆம் திகதி 239 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகரை நோக்கி பயணித்த வேளை காணாமல்போனது.