எபோலா வைரஸ் விஸ்வரூபம் இதுவரையில் 932 பேர் சாவு, ஆபிரிக்கடுகளில் கட்டுமீறி பரவுகிறது

ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிச் செல்லும் எபோலா வைரஸ் உயிர்க்கொல்லி நோயினால் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 932 வரையில் உயர்வடைந்திருப்பதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.

எபோலா வைரஸ் உயிர்க் கொல்லி நிலைப்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப் பட்டிருப்பதாக அறிவிப்பு ஒன்றை விடுத்தே உலக சுகாதார அமைப்பு மேற் கண்ட தகவலையும் வெளிப்படுத்தியிருந்தது.

இந்த எபோலா உயிர்க் கொல்லி வைரஸானது லைபீரியா, சியேராலியோன், கினியா, சூடான் மற்றும் கொங்கோ நாடுகளில் கட்டு மீறி வியாபித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோரின் எண்ணிக்கை 1,858 ஆகும்.

இந்த வைரஸ் ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் பரவிச் செல்லும் அபாயம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தொண்டர்களாகச் சேவை புரிவதற்கு ஆபிரிக்காவுக்குச் சென்றிருந்த வைத்தியர்கள், ஆண், பெண் தாதியர்கள் ஆகிய நிவாரண சேவைகளை மேற்கொண்டிருந்தோரின் உயிர்களும்கூட தற்போது ஆபத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மீளத் திரும்பியுள்ள அந்த உத்தியோகத்தர்கள் காரணமாக இந்த நோய் அந்தந்த நாடுகளுக்கும் பரவிச் செல்லும் அபாயமொன்று இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

எபோலா வைரஸ் எபோலா காய்ச்சல் எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்த வைரஸ் உடலுக்குள் சென்றதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கடந்ததன் பின்னரே நோய்த்தாக்கம் வெளிப்படும்.

கடுமையான காய்ச்சல், தசைக் கோளங்களில் ஏற்படும் கடுமையான வலி, தலையிடி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவை நோய் அறிகுறிகளாகும். இந்த வைரஸினால் ஈரல் மற்றும் சிறுநீரகங்களுக்குப் பாதிப்பும் உடலின் உட்புறத்தில் இரத்தக் கசிவும் ஏற்படும்.

இதனிடையே அமெரிக்காவின் உணவுகள் மற்றும் மருந்துகள் அதிகார சபையின் மருத்துவ ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இன்னமும் பரிசோதனை மட்டத்தில் உள்ள தடுப்பூசியை ஆபிரிக்க நாடுகளில் உள்ள எபோலா நோயாளர்களுக்கு வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தகவல் வழங்கியுள்ளன.