என்பத்தொன்பதாயிரம் விதவைகளுக்கு திட்டங்கள் எது­வு­மில்லை – எம்.பி விஜ­ய­கலா

vijayakala-makeswaranஅரசாங்கம் சமர்ப்பித்துள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்த மாகாணங்களை அரசாங்கம் முற்றுமுழுதாக கைவிட்டுள்ளமை கவலைதரும் விடயமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சபையில் தெரிவித்தார் .

வரவு – செலவுத் திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

யுத்தத்தினால் உயிர்களையும் உடைமைகளையும் இழந்த இந்த மக்கள் யுத்தம் முடிவடைந்து நான்கரை வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் நடுத்தெருவிலேயே நிற்கின்றனர். யுத்தத்தில் விதவைகளாக்கப்பட்ட பெண்கள் தொடர்பாகவோ அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்தோ எத்தகைய திட்டங்களும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் 89 ஆயிரம் விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். விதவைகளை தலைவராகக் கொண்டியங்கும் குடும்பங்கள் இன்று வாழ வழியின்றி பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றன.

இத்தகைய குடும்பங்கள் ஒரு நேரம் கூட உண்பதற்கு கஷ்டப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது. விதவைகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இவர்களுக்கு சுய தொழில்களை ஊக்குவிப்பதற்கோ அல்லது வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கோ உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதனால் யுத்தத்தில் கணவனை இழந்த இந்த பெண்கள் வாழ வழியின்றி தொடர்ந்தும் அல்லல்பட்டு வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து நான்கரை வருடத்துக்கு மேலாகிவிட்டபோதிலும் இவர்களின் வாழ்வில் இன்னமும் வெளிச்சம் ஏற்படவில்லை.

யுத்தத்தினால் அங்கவீனமாகியும் படுகாயங்கள் அடைந்தும் நடமாட முடியாது ஆயிரக்கணக்கானோர் அல்லல்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் உரிய உதவிகளின்றி கஷ்டங்களையே அனுபவித்து வருகின்றனர். வடக்கில் தமது உடல்களில் ஷெல் துகள்களையும் குண்டுகளின் சிதறல்களையும் தாங்கியவண்ணம் பல நூற்றுக்கணக்கானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் வேதனையில் துடித்து வருகின்றனர். இத்தகையவர்களுக்கு விசேட திட்டங்களை உருவாக்கி அவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் 400 க்கு மேற்பட்டோர் இவ்வாறு குண்டுகளின் சிதறல்களையும் ஷெல் துகள்களையும் உடம்பினுள் தாங்கியவண்ணம் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கும் வாழ்வாதாரத்துக்கான உதவிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் முன்வரவேண்டும்.

யுத்தத்தின் வடுக்களாக மாறியிருக்கும் புனர்வாழ்வுபெற்ற போராளிகளும் தமது வாழ்வாதாரத்தை கொண்டுநடத்த முடியாது பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் பெருமளவானோர் வேலைவாய்ப்புகளின்றி எதிர்காலமே சூனியமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கும் வாழ்வாதாரத்துக்கான திட்டங்களை வகுப்பதற்கும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைத்துள்ளதாக அரசாங்கம் மார்தட்டி வருகின்றது. ஆனால் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்தவித உதவிகளையும் செய்யாமையினால் அவர்கள் இன்று எதிர்காலமின்றிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மக்களும் அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அல்லல்படுகின்றனர். வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் இன்னமும் பூரணப்படுத்தப்படவில்லை. யுத்தத்தின்போது முற்றாக அழிக்கப்பட்ட அவர்களது வீடுவாசல்கள் கூட இன்னமும் பூரணமாக கட்டிக்கொடுக்கப்படவில்லை. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படுவதற்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டுள்ளபோதிலும் இதுவரை 5 ஆயிரம் வீடுகள் கூட அமைக்கப்படவில்லை. இவ்வாறு மந்தகதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் வடக்கில் மீள்குடியேறிய மக்களே பெரும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

யுத்தப் பாதிப்புக்களிலிருந்து மீளாத வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு இந்த வரவு – செலவுத் திட்டமானது பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ஏனெனில் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான ஒரு சிறிய திட்டம்கூட வரவு – செலவுத் திட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வருடந்தோறும் பாதுகாப்புச் செலவினம் அதிகரிக்கப்பட்டே வருகின்றது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றபோது பாதுகாப்பு செலவினத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட கடந்த 4 வருடகாலமாக பாதுகாப்புக்கான செலவினம் அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது.

கல்விக்கோ சுகாதார சேவைகளுக்கோ இந்தளவு நிதி ஒதுக்கப்படவில்லை. யுத்தம் நடைபெற்றபோது கூட இந்தளவு நிதி தேசிய பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. யுத்தம் முடிவடைந்து நாட்டில் தற்போது அமைதி நிலவுகின்ற நிலையில் பாதுகாப்புக்கு ஏன் இந்தளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும்?

டி . எஸ் . சேனநாயக்காவின் ஆட்சிக்காலமாகட்டும் அல்லது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலாகட்டும் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் உரிய வகையில் நிதி ஒதுக்கப்பட்டது. கல்விக்கும் சுகாதாரத்துக்கும் 100 வீத ஒதுக்கீடுகள் மேற்கொள்ளளப்பட்டிருந்தன. தற்போது 35 வீதமாகவே இந்த ஒதுக்கீடுகள் அமைந்துள்ளன நாட்டில் கல்வியும் சுகாதாரத் துறையும் மேம்பட்டால் தான் நாட்டை உரிய வகையில் அபிவிருத்தி செய்ய முடியும். ஆனால் இன்றைய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்திலோ இதற்கான ஒதுக்கீடுகள் மிகவும் குறைந்தளவே காணப்படுகின்றன. கல்விக்கு 388 கோடி ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்கும் போதியளவு ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. மீள்குடியேற்ற அமைச்சுக்கு 357 கோடி ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேமநலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புக்கு மட்டுமே இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து எதிர்வரும் மே மாதத்துடன் 5 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளன. ஆனால் 30 வருடகால யுத்ததத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையினையும் அரசாங்கம் எடுக்கவில்லை. அரசியல் தீர்வுக்குப் பதிலாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளே இடம்பெற்று வருகின்றன. திட்டமிட்ட வகையில் குடியேற்றங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகள் ஒருபோதும் நல்லிணக்கத்துக்கோ நிரந்தர சமாதானத்துக்கோ வழிவகுக்கப் போவதில்லை