தமிழ் மக்களுக்கு தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வதற்கு தான் தயாராக உள்ளதுடன், பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயபெரேரா தெரிவித்தார்.
பலாலி படைமுகாமில் நேற்று புதன்கிழமை உதயபெரேராவுக்கும் யாழ். வலிகாமம் கிழக்கு விவசாயிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
‘நீங்கள் என்னுடன் வெளிப்படையாக பேசுவதை நான் விரும்புகின்றேன்.
இராணுவத்தினர் விவசாய உற்பத்திகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற ஈ.பி.டி.பி. யின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போது, அவர்களால் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்துகொண்டு தீர்வு காண்பதற்காக நான் உங்களை அழைத்தேன்.
இராணுவத்தினரின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதும் மக்களைப் பாதுகாப்பதும் ஆகும். தற்பொழுது இராணுவ முகாம்களை அகற்றி மக்களுடைய வீடுகளையும் விவசாய நிலங்களையும் ஒப்படைத்து வருகிறோம்.
இராணுவத்தினர் அகற்றப்பட்டவுடன் களவுகள் இடம்பெறுவதாக மக்கள் எமக்கு தெரிவிக்கின்றார்கள். அது சிவில் நிர்வாகப் பிரச்சினை. அதனைப் பார்க்க வேண்டியது பொலிஸார். இருந்தும், நாங்கள் இராணுவத்தை இரவு வேளைகளில் வீதி ரோந்துகளில் ஈடுபடுத்தியுள்ளோம்.
விவசாயிகளின் உற்பத்திகளை சந்தையில் விற்பனை செய்வதற்கும் இராணுவத்தினர் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தையில் விற்பனை செய்யாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இராணுவத்தினருக்கு தேவையான பொருட்களை மக்களிடம் பெற்று அதில் பயன்பெற வேண்டும்.
இந்த நிலையில்,உடனடியாக 300 லீற்றர் பசுப்பாலை 60 ரூபா படியும் முட்டைகள், இறைச்சி, கோழிகள், சிரட்டைகள் ஆகியவற்றில் 75 சதவீதமானவற்றை கொள்வனவு செய்வதற்கு தயாராக உள்ளோம்.மேலும், 10 சலவைத் தொழிலாளிகளும் 20 சிகை அலங்காரத் தொழிலாளிகளும் எமக்கு தேவையாக உள்ளார்கள். இவை அனைத்தையும் நாம் தமிழ் மக்களிடம் இருந்தே எதிர்பார்க்கிறோம்.
டெங்கு ஒழிப்பு, பாதினிய ஒழிப்பு ஆகியவற்றை விவசாய அமைப்புக்களுடனும் பொது அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து மேற்கொள்ள இராணுவத்தினர் தயாராக இருக்கின்றார்கள்.
எனவே, மக்களுக்குச் சேவையாற்ற நாங்கள் இருக்கின்றோம்’ என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி. கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்), வலி. மேற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. மேற்கு இணைப்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன், பருத்தித்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச இணைப்பாளருமான ஜ.ஸ்ரீரங்கேஸ்வரன், வலி. கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. கிழக்கு பிரதேச இணைப்பாளருமான இராமநாதன் ஐங்கரன், பிரதேச சபையின் உறுப்பினர் க.சந்திரபோஸ், வலி.கிழக்கு விவசாய அபிவிருத்திச்சபைத் தலைவர் அ.தம்பிநாதன், வலி.கிழக்கு விவசாய சம்மேளனங்களின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.