“வீட்டிலிருந்து கோயிலுக்குச் சென்ற என் கணவரை இராணுவத்தினர் சுட்டு ‘ட்ரக்’கில் ஏற்றிச் சென்றனர். இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? இறந்து விட்டாரா? என்பது கூடத் தெரியவில்லை.” – இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று கண்ணீருடன் சாட்சியமளித்தார் ஆரையம்பதியைச் சேர்ந்த குணசிங்கம் என்பவரின் மனைவி.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றது.
காத்தான்குடியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த இந்த விசாரணை மூன்றாம் நாளான இன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் திருமதி குணசிங்கம் என்வர் தனது சாட்சியத்தை பதிவு செய்கையில் தெரிவித்ததாவது;
எனது கணவர் வீட்டிலிருந்து பழைய வீதியிலுள்ள (பழைய கல்முனை வீதி) முருகன் ஆலயத்திற்கு சம்பவ தினம் மாலை சென்றார். அப்போது வெடிச்சத்தம் கேட்டது. அதன் பின்னர் நாங்கள் அந்த இடத்திற்குப் போனவேளை அருகிலிருந்த கடையில் நின்றவர்கள் எனது கணவரான குணசிங்கத்தை இராணுவத்தினர் சுட்டு ட்ரக் வண்டியில் ஏற்றிப் போனதாகச் சொன்னார்கள்.
ஒரு சி.ஐ.டி வானும், இராணுவ ட்ரக் வண்டியும் அப்போது சிறிது தொலைவில் போய்க் கொண்டிருந்தன. இதன் பின்னர் நாங்கள் இராணுவ முகாமுக்கு சென்று எனது கணவர் குறித்துக் கேட்டோம். ஒரு பிரயோசனமும் இல்லை. காத்தான்குடி பொலிஸிடமும், கிராம சேவையாளரிடமும் முறையிட்டேன். இதன் பின்னர் பிரதேச செயலாளருக்கு கிராம சேவையாளர் அறிவித்தல் கொடுத்ததைத் தொடர்ந்து, என்னிடம் மரண சான்றிதழ் கொடுத்தனர்.
ஆனால் என்கணவரின் சடலத்தையோ அல்லது அவரையோ யாரும் இன்னமும் தரவில்லை இதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூடத் தெரியவில்லை. – என்றார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் இன்றைய விசாரணையின் போது காத்தான்குடியில் காணாமல் போனவர்கள், வந்தாறுமூலையில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் எனப் பலரது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
நாளை திங்கட்கிழமையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் குறித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. காணாமல் போனோர் குறித்து முறைப்பாடு செய்தவர்களுக்கு ஆணைக்குழுவினால் அழைப்புக்கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.