யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்கு கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தில் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாக சிறிடெலோ கட்சியின் செயலதிபர் ப. உதயராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, சிறிடெலோ கட்சி ஆகிய நான்கு கட்சிகளின் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது உண்மையான விடயமேயாகும்.
எனினும், இந்தியாவில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க போன்று இலங்கையிலும் தமிழ் கட்சிகளுக்குள் செயற்படுவது தொடர்பாகவே இச் சந்திப்பின் நோக்கமாக இருந்தது. அது தமிழ் மக்களுக்கான பலமான அரசியல் போக்குக்காக அமைந்திருந்தது.
எமக்குள் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் கலந்துரையாடல் இடம்பெறும். அதன் போது அரசியலில் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஆராயப்படலாம் எனவும் கருத்து தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடல் யாழ். நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை பிற்பகல் 4 மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியின் சுகு சிறிதரன், சிறிரெலோ அமைப்பினைச் சேர்ந்த உதயராசா, வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தமிழழகன், மாநாகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் அங்கத்தவர்கள் உள்ளிட்ட கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்புடைய செய்தி