ஊடகவியலாளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு வடமாகாண சபையில் கண்டனம்

CVK-Sivaganamகொழும்பில் நடைபெறவிருந்த பயிலமர்வு ஒன்றுக்குச் சென்ற ஊடகவியலாளர்கள், அவர்கள் சென்ற வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக கூறியதற்கும், தொடர்ந்து வடக்கு ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமைக்கும் வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (05) கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் (13ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டடத் தொகுதியில் இன்று (05) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.

இதன்போதே, மேற்படி கண்டனத்தை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவையில் முன்வைத்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கு ஊடகவியலாளர்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் கொழும்பில் ஜூலை 26, 27ஆம் திகதிகளில் ஒரு பயிலமர்வு இடம்பெறவிருந்தது. அந்த பயிலமர்வில் கலந்துகொள்வதற்காக 25ஆம் திகதி கொழும்பு நோக்கிச் சென்ற ஊடகவியலாளர்களின் வாகனத்தில் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் கஞ்சா வைக்கப்பட்டு, அவர்களைக் கஞ்சா கடத்தல்காரர்கள் எனக்கூறி அந்தப் பயிலமர்வுக்குச் செல்லவிடாமல் அரசும், அரசு சார்பானவர்களும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, வடக்கு ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் எனவும், அவர்களுக்கு பயிலமர்வு நடத்த வேண்டாம் என, அரச ஆதரவாளர்கள் 26ஆம் திகதி காலையில் கொழும்பிலும் போராட்டம் நடத்தி குறித்த பயிலமர்வை நடத்தவிடாமல் செய்தனர்.

இவ்வாறான அநீதியான செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனை வடமாகாண சபையும் வன்மையாகக் கண்டிக்கின்றது என்றார்.

Recommended For You

About the Author: Editor