உயிரிழந்த முதியவரின் உடலை உரிய அனுமதிகளின்றி கொண்டு வரப்பட்டதால் 14 குடும்பங்கள் ஊர்காவற்றுறையில் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா அபாயமுள்ள வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடல் உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட எழுவைதீவு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் மாகாணமொன்றில் உயிரிழந்த 95 வயதான முதியவரின் சடலமே எழுவைதீவிற்கு கொண்டு வரப்பட்டது.

முதியவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அவரது இறப்பிற்கு காரணம் என்ன என்பது தொடர்பில் உரிய சுகாதார அதிகாரிகளின் பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இருதய செயலிழப்பு என திடீர் மரண விசாரணை அதிகாரியின் பதிவு மாத்திரமே அவர்களிடமிருந்தது.

இந்த நிலையில் முறைப்படியான அனுமதிகள் இன்றி, நேற்றுமுன்தினம் இரவு எழுவை தீவிற்கு இரகசியமாக கொண்டு வரப்பட்டு, இறுதி நிகழ்வு இடம்பெற்றது.

இதையடுத்து, ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால், இறுதி நிகழ்வில் பங்கேற்ற 14 குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இறுதி நிகழ்வில் மத சடங்குகளை மேற்கொண்ட மதகுருவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளைமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor