உதைபந்தாட்டப் போட்டியில் மோதல், 7 பேர் காயம்!

fightஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஒரே ஊரைச் சேர்ந்த ஏழு பேர் படுகாயமுற்ற நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை நள்ளிரவில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இரவு நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் இடம்பெற்ற வாய்த் தர்க்கத்தைத் தொடர்ந்து, தமது சொந்த இடத்திற்குச் சென்ற இரு பிரிவினர் அங்கு பின்பு குழுக்களாக இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே இப்படிக் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இளவாலை வசந்தபுரத்தைச் சேர்ந்த சகோதரர்களான மகேந்திரன் ரஞ்சித்ராஜ் (வயது 32), மகேந்திரன் அசோக்குமார் (வயது 30), மகேந்திரன் இராஜ்குமார் (வயது 28) மற்றும் மார்க்கண்டு கருணானந்தன் (வயது 21), ஆனந்தராசா கபிலன் (வயது 23), பூதப் பிள்ளை சுரேஷ்குமார் (வயது 31), இந்திரஜித் தவனேசன் (வயது 32) ஆகியோரே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களாவர்.

இந்தச் சம்பவத்தில் மற்றும் சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இளவாலைப் பொலிஸார் தகவல் அறிந்து குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.