உண்மைக்குப் புறம்பான சரித்திரத்தை சிறுவர்களிடம் விதைத்தால் இனக்கிளர்ச்சிக்கே வித்திடும் – விக்னேஸ்வரன்

vicky0vickneswaranவடக்கில் வளரும் ஒவ்வொரு அரச மரத்தையும் சங்கமித்தை அல்லது மகிந்தன் கால அரச மரமென்றும், இராவணன் சிங்கள இனத்தவர் என்றும், உண்மைக்குப் புறம்பான புதிய சரித்திரம் சிறுவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டால் அது இனக்கிளர்ச்சிகளுக்கே வித்திடும் என்று எச்சரித்துள்ளார் வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்.

எஸ்ஓ.எஸ் சிறுவர் கிராம ஆரம்ப விழாவில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில்,

“இவ்வருடத்தைய எனது முதல் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் அமைச்சர்களுடன் சேர்ந்து பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

மத்திய- மாகாண அரசாங்கங்களிடையில் புரிந்துணர்வும் கூட்டுறவும் நிலவினால்த்தான் நாடு முன்னேறும்.

மக்கள் நலம் பெறுவார்கள். மத்தியஅரசாங்கத்திற்கு சில அதிகாரங்களையும் கடமைகளையும் சட்டம் விதித்திருப்பது போலத்தான் மாகாண அரசுகளுக்கும் சில அதிகாரங்கள்,வரம்புகள், கடப்பாடுகள் ஆகியன நியமிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவை போதாது என்பதற்கு 13வது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் மட்டுமின்றி அதிகாரத்தில் இருப்பவர்களின் அசட்டையுங் காரணமென்று கூறலாம்.

மாகாண அதிகாரங்களை விரிவுபடுத்த மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும். முக்கியமாக இந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் முற்றிலும் விரிவுபடுத்தப்படவேண்டும்.

ஆனால் அது முதல்ப்படிதான். இரண்டாவதாக புதியதொரு அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டு ஒற்றையாட்சி முறை கைவிடப்படவேண்டும்.

ஒரே தேசம் ஒரே மக்கள் என்றெல்லாம் மேடைக்கு மேடை கூக்குரல் எழுப்புவதில் பயனில்லை. ஏனென்றால் இது ஒரே தேசமாக இருக்கும் அதே நேரத்தில், வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

ஒரே நாட்டில் வாழ்வதால் நாங்கள் ஒரே மக்களாகிவிட முடியாது. நாம் யாவரும் ஒரு நாட்டு மக்களே என்று பெருவாரியான பெரும்பான்மையின மக்கள் கூறும் போது இது சிங்கள பௌத்த நாடு. எல்லோரும் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டின் கீழடங்கிய இந் நாட்டின் குடிமக்களே என்ற அடிப்படை எண்ணத்தில்த் தான் தமது கருத்தை வெளியிடுகின்றார்கள். இது தவறு என்று அவர்கள் எண்ணுவதில்லை.

அத்துடன் நாம் எமது குழந்தைகளுக்கும் தவறான சரித்திரக் கருத்துக்களைக் கொடுத்து வருகின்றோம் என்றும் நாம் சிந்திப்பதில்லை. இன்று சரித்திரம் மாற்றியமைக்கப்பட்டு புதிய ஆனால் தவறான சிந்தனைகள் அரசியல் காரணங்களுக்காகப் பரப்பப்பட்டு வருகின்றன.

இத்தருணத்தில் சரித்திர பாடம் நடத்துவது எனது எண்ணமில்லை. ஆனால் தகுதியுடைய சர்வதேச சரித்திர வல்லுனர்கள் சேர்ந்து இலங்கையின் ஆரம்பகாலம் முதலான சரித்திரத்தை ஆங்கிலேயரிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கும் வரையிலான காலம் வரையில் மீண்டும் எழுதி வைப்பது நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் நன்மை பயக்கும்.

உண்மையை நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் எமக்கு பிறக்க வேண்டும்.

அண்மையில் சார்மினி சேரசிங்க என்ற சிங்கள பெண் ஊடகவியலாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். Mahavamsa – An Insult to the Buddha என்பது அதன் தலையங்கம்.

புத்தபெருமானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவது மகாவம்சம் என்று தலையங்கம் இடப்பட்டிருக்கின்றது அந்தக் கட்டுரைக்கு. உண்மைகளை வெளிக்கொண்டுவரும் சிறந்த கட்டுரை அது.

இத்தருணத்தில் ஒரேயொரு கருத்தை மட்டும் இலங்கைத் தமிழ்மக்கள் சார்பில் கூறிவைக்கின்றேன். 1919ம் ஆண்டில் அப்போதைய இலங்கையின் மக்கட் தலைவர்களான E.A.சமரவிக்கரம அவர்களும் சேர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களும் சேர்.பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் ஒரு கூற்றை உள்ளடக்கி இருந்தார்கள். அதை ஆங்கிலத்திலேயே முதலில் தருகின்றேன்.

“The Tamils like the Sinhalese and unlike any other people of the Island, were in themselves a majority community and as such
had reason neither to be classed with the minorities nor to stand in need of any safeguards”.

அதாவது தீவின் மற்றைய சிறுபான்மையர் போலல்லாது தமிழர்கள் சிங்கள மக்கள் போல் நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களே. ஆகவே அவர்களைச் சிறுபான்மையினராகக் கருதவோ, சிறுபான்மையினருக்குரிய சலுகைகளை அவர்களுக்கு வழங்கவோ தேவையில்லை என்றார்கள்.

அதாவது தமிழ் மக்கள் இந்நாட்டின் சிறுபான்மையினர் எனக் கருதப்படாமல் காலாதிகாலமாக வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்திருந்தார்கள் என்ற உண்மையை அவர்கள் நூறு வருடங்களுக்கு முன்னரே கூறியிருந்தார்கள்.

இப்பொழுது வடக்கில் வளரும் ஒவ்வொரு அரசமரத்தையும் சங்கமித்தை அல்லது மகிந்தன் கால அரசமரமென்றும் இராவணன் சிங்கள இனத்தவர் என்றும் புதிய சரித்திரம் வகுக்கப்பட்டு வருகிறது.

சிங்களமொழி நடைமுறைக்கு வந்ததே கிறீஸ்துவிற்குப் பின்னர். இராவணன் சரித்திர காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவர். அப்படியிருந்தும் இப்படிக் கூறிவருகின்றார்கள்.

உண்மைக்குப் புறம்பான இந்தப் புதிய சரித்திரம் சிறுவர் சிறுமியர் மத்தியில் விதைக்கப்பட்டால் இனக் கிளர்ச்சிகளுக்கே அது வித்திடும்.

அதனால் தான் சர்வதேச சரித்திர வல்லுநர்கள் சேர்ந்து இலங்கையின் ஆரம்பகாலம் தொடக்கம் 1948 ஆம் ஆண்டு வரையிலான சரித்திரத்தைப் பக்கச்சார்பின்றி எழுதவேண்டும் என்று குறிப்பிட்டேன்.

உண்மைக்குப் புறம்பான சரித்திரக் குறிப்புக்கள் குழந்தைகளைப் பாதித்து விடுவன என்பதற்காகவே இதைக் கூறிவைக்கின்றேன்.

தாய் தந்தையரின் பராமரிப்பு இல்லாத குழந்தைகளின் நலன் கருதியே எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம் உருவாக்கப்பட்டது. 133 சர்வதேச நாடுகளில் இயங்கும் உங்கள் நிறுவனம் இலங்கையில் 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

உங்கள் நிறுவனத்தின் சிறப்பு குடும்ப பின்னணியோடு பிள்ளைகள் வளருவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதே. அதை ஆங்கிலத்தில் Family Based Care என்று அழைப்பார்கள்.

எங்கள் யுத்த காலத்தின் பின்னர் இந் நிறுவனத்தின் சேவையானது மிகவும் முக்கியமானதொன்றாகப் பரிணமித்திருக்கிறது. இப்போது நீங்கள் குடும்ப வலுவூட்டல் திட்டத்தையும் வழிநடத்தி வருகின்றீர்கள்.

Family Strengthening Programme எனப்படும் இந்தத் திட்டம் வறுமை, நோய், வேலையின்மை போன்ற பல சமூகக் காரணிகளினால் சிறுவர்கள் சிறுமியர்கள் தனித்து விடப்படும் நிலையைத் தடுத்து நிறுத்தி அவர்கள் தமது குடும்பத்தினருடன் வாழ வழி வகுக்கின்றது.

முறையான விதத்தில் நடத்திச் செல்லப்பட்டால் இது மிகவும் முக்கியமானதொரு திட்டம் என்று நான் கருதுகின்றேன்.

போரானது பல குடும்ப அங்கத்தவர்களை சிதறுண்டு செல்ல வழிகோலியது. தாய் ஓரிடம் தந்தை இன்னோரிடம் குழந்தைகள் வெவ்வேறு இடங்களில் வளர வேண்டிய சூழ்நிலை.

மீண்டும் அவர்களைச் சேர்ந்து வைத்து சிதறுண்ட குடும்ப வாழ்க்கைக்குப் புத்துயிர் அளிக்கும் இத்திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒரு திட்டம்.

ஆனால் பல குடும்பங்களில் புதியதொரு அங்கத்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்தான் காணாமல்போன நபர். அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்று கூறமுடியாத ஒரு இரண்டுங் கெட்டான் நிலையில்த் தான் அவரின் குடும்பத்தவர்கள் வாழ்கின்றார்கள்.

அவர்களை உயிருடன் எடுத்துச் சென்றதைக் கண்கூடாகப் பார்த்த அவரின் உற்றார் உறவினர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று அறியாது தவிக்கின்றனர்.

இன்னுமொரு முக்கியமான கவலையும் அவர்களைப் பீடித்துள்ளது. எங்கே தமது காணாதவர்களைக் காண எத்தனித்து அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயம் அவர்களை வாட்டி வதைக்கின்றது.

காணாமல்போனவர் குறிப்பிட்ட இடத்தில் இருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டால் கூட அதைத் தமக்குத் தெரியும் என்று வெளிப்படையாகக் கூறினால் எங்கே அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தமது எண்ணங்களை வெளியிடத் தயங்கி வாழ்ந்து வருகின்றார்கள் பலர்.

ஒருவர் என்னிடம் கேட்டார் என்ன சேர்! இராணுவத்தை வெளியே போ என்று நீங்கள் கூறி வருகின்றீர்கள். அவர்கள் போவதாக இருந்தால் அவர்கள் தடுத்து வைத்திருக்கும் எங்கள் காணாத உறவினர்களை அவர்கள் கொன்று விட்டுத்தானே போவார்கள்? இப்பொழுதாவது அவர்கள் இருக்கின்றார்கள் என்று தெரிய வருகின்றது. ஆனால் நீங்கள் கேட்பது போல் நடந்தால் அவர்களின் உயிர்களுக்கு யார் உத்தரவாதம் அளிப்பது? என்று நெஞ்சுவிம்மிக் கேட்டார்.

அதாவது குடும்ப வலுவூட்டல் திட்டத்தில் ஈடுபடும் எமது எஸ்.ஓ.எஸ் நிறுவனத்தினர் குடும்பங்களை ஒன்று சேர்ப்பதாகில் இந்தக் காணாமல் போனோர் என்ற பரிதாபத்திற்குரிய மக்கட் குழுவினர் பற்றி சற்று உரக்கக் குரல் கொடுத்தால் நல்லது என்று நான் கருதுகின்றேன்.

காணாமல் போனோர் பற்றிய அண்மையில் நிரப்புவதற்காகக் கொடுக்கப்பட்ட படிவங்கள் உண்மையை திசைதிருப்பும் வகையில் அமைந்துள்ளன. அதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது.

இராணுவத்தினரோ அரசாங்கமோ தமக்கு ஏதாவது நன்மை கிடைக்காவிட்டால் இந்தக் காணாமல்போனோர் என்ற மக்கட் குழுவினரை விடுவிக்காது வைத்துப் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

இது சம்பந்தமாகக் கூறப்படும் ஒரு காரணம் போரில் ஈடுபட்ட இயக்கத்தினர் பொன், பொருள், திரவியங்கள் ஆகியவற்றை எங்கே புதைத்தோ, பத்திரமாகப் பதுக்கியோ வைத்திருக்கின்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் அறியவே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று. இதற்காகச் சித்திரவதைக்கு ஆட்படுத்தப்படுகின்றார்கள் என்றும் எமக்கு செய்திகள் வருகின்றன.

இது பற்றிக் கேட்டால் தமக்கு எதுவுந் தெரியாது, காணாமல்போனவர்களுக்கு தாங்கள் பொறுப்பில்லை அல்லது தமிழ் இயக்கங்கள் தான் அவர்களைக் கொண்டுபோய் இருக்க வேண்டும் என்று அதிகாரத்தில் உள்ளவர்களால் கூறப்படுகின்றது.

இன்று ஜனநாயகத்திற்குத் திரும்பி வந்திருப்பதாகத் தெரிவிக்கும் பல முன்னைய இயக்கத்தினர் தொடர்ந்தும் ஆயுதங்களைக் களவாக வைத்திருப்பதுந் தெரிய வந்துள்ளது.

அண்மையில் ஒருவர் தீவுப் பகுதி ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டது சம்பந்தமாகப் பாவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சுடுகலன் எப்படி பெறப்பட்டது என்பது சம்பந்தமாக உரிய விசாரணை நடைபெற வேண்டும். அதிலிருந்து பல விடயங்கள் வெளிவரலாம்.

குழந்தைகளின் நலன் பற்றிப் பேசும் ஒரு கூட்டத்தில் வந்து இப்பேர்ப்பட்ட விடயங்கள் பற்றிக் கூறுகின்றீர்களே என்று உங்களில் சிலர் என்னிடம் கேள்வி எழுப்பக் கூடும். ஆனால் அதற்குப் பதிலளிக்கும் வண்ணமாக நான் சில கேள்விகளை உங்களிடம் எழுப்பக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தக் குழந்தைகள் இப்பேர்ப்பட்ட அவலங்களுக்கு ஆளாவதற்குக் காரணகர்த்தாக்கள் யார்?

சிந்திக்காது மக்களிடையே வேற்றுமைகளையும் இனப்பாகுபாடுகளையும் இனவெறுப்புக்களையும் ஏற்படுத்திய எமது அரசியல்வாதிகளும் மற்றோரும் இல்லையா?

அடுத்த தேர்தலில் வாக்குரிமை பெறவேண்டும் என்பதற்காக உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு பாரபட்சமான நடவடிக்கைகளில், இலங்கை சுதந்திரம் அடைந்த நாட்களில் இருந்து நாம் ஈடுபட்டு வந்ததால் அல்லவா இந்தக் குழந்தைகளுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டது?

போரின்போது நடந்த மனித அழிப்பு நடவடிக்கைகளால் அல்லவா குழந்தைகள் இந்த நிலைக்கு ஆட்பட்டுள்ளார்கள்?

இன்றும் போர்முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் இராணுவத்தை இப்பிரதேசங்களில் நிலைநிறுத்தி இருப்பதால் அல்லவா மக்களின் வாழ்வுநிலை கவலைக்கிடமாகியுள்ளது?

சட்டப்படி மனிதாபிமான முறைப்படி அதிகாரத்தில் உள்ளவர்கள் நடந்திருந்தால் காணாமற் போனோர் என்ற ஒரு மனிதக் குழு நடைமுறையில் இருந்திருக்க முடியுமா?

சிறுவர் சிறுமியர்க்காக அவர்களின் நலனுக்காக அவர்களின் மறுவாழ்வுக்காக எஸ்.ஓ.எஸ். நிறுவனம் செய்து வரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் அதே நேரம் இந்தக் குழந்தைகளுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது, அதற்கு நாங்கள் எந்த விதத்தில் பங்காற்றல் செய்திருக்கின்றோம் என்ற கேள்விகளுக்கு நாங்கள் கூட்டாகச் சேர்ந்து சிந்தித்துப் பதில் காண்பது அவசியம்.

நோய் வராமல் தடுப்பதும் மருத்துவமே. நோய்க்கு மருந்து அளிப்பதும் மருத்துவமே. இனியாவது எமது சிறுவர் சிறுமியர்களுக்கு இப்பேர்ப்பட்ட அவலநிலை வராது தடுக்க நாங்கள் ஆவன செய்ய வேண்டும்.

கொடூரமான போரில் பங்கேற்ற அதே இராணுவத்தினர் தொடர்ந்தும் வட கிழக்கு மாகாணங்களில் நிலைநிறுத்தப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகின்றன என்றால் அதனால் ஏற்படக் கூடிய சமூகப் பரிதவிப்பு, சமூக அவலங்கள், சமூக முரண்பாடுகள் என்ற பலதையும் நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இராணுவத்தை நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் நிலை நிறுத்த வழியமைக்குஞ் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகின்றது.

அப்படியானால் வட கிழக்கில் இருக்கும் இராணுவத்தை ஒன்பதாகப் பிரித்து ஒரே அளவிலான இராணுவத்தினரை ஒன்பது மாகாணங்களிலும் நிலை நிறுத்தலாமே.

அதற்கு இடமளிக்கும் வகையில் ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் நாம் எடுக்க வேண்டும்.

எனவே இராணுவத்தினரை வடக்கு கிழக்கில் மட்டும் பாரிய அளவில் நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதைக் கூறிவைக்கின்றேன்.

இவற்றையெல்லாம் இங்கு வருகை தந்திருக்கும் அமைச்சர்களும் மற்றையோரும் சிந்தித்துப் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.