இலங்கை தனித்துவமாக தென்படக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது – ஐஸ்லாந்து ஜனாதிபதி

Olafur Ragnar Grimsson‘முரண்பாடு தீர்க்கப்பட்டதன் பின்னர் இலங்கை தனித்துவமாக தென்படக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எஞ்சிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலம் தேவைப்படுகிறது. கால வரையறையை தீர்மானிப்பது பயனுறுதிமிக்கதாக அமையாது’ என ஐஸ்லாந்து ஜனாதிபதி ஒலாப்பூர் ரெக்னார் கிறிம்சன் (Olafur Ragnar Grimsson) அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தெரிவித்தார்.

ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள சனாதிபதி ராஜபக்ஷ அவர்களுடன் நேற்று முன்தினம் அபுதாபி நகரில் எமிரேட்ஸ் பலஸ் ஹோட்டலில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது ஐஸ்லாந்து தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு முன்னர் தான் இருமுறை ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை சந்தித்துள்ளதை ஞாபகப்படுத்திய கிறிம்சன் ஜனாதிபதி அவர்கள் மீண்டும் சந்திக்க கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

‘எமது இரு நாடுகளுக்கிடையில் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென நான் கருதுகிறேன்’ என்று குறிப்பிட்ட ஐஸ்லாந்து தலைவர் கடற்றொழில், இறைச்சி உற்பத்தி, பழச்செய்கை போன்ற துறைகளில் வாணிப அடிப்படையில் இலங்கையுடன் கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஆலோசனை தெரிவித்தார். இவ்வுற்பத்திகளுக்காக சுமார் 50, 60 நாடுகளில் திருப்திகரமான சந்தை இருப்பதை கிறிம்சன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஐஸ்லாந்து இத்துறைகளில் நவீன தொழில்நுட்ப முறைகளை மேம்படுத்தியுள்ளதெனவும் அதன் மூலம் மீன், இறைச்சி, பழங்கள் போன்றவற்றைப் பதப்படுத்தி வைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

ஐஸ்லாந்து ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளவாறு இருதரப்பு தொடர்புகளை வளர்த்துக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தியின் முன்னேற்றத்தை தெளிவுபடுத்தினார்.

‘கண்ணிவெடி அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். முன்னாள் போராளிகள் சுமார் 11,000 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 2,000 சிறுவர் போராளிகள் மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்’ என ஜனாதிபதி கூறினார்.

நெடுஞ்சாலை, சுகாதாரம், நீர்வளங்கள், மின்சாரம், கல்வி ஆகிய துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு பெருமளவு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட ராஜபக்ஷ அவர்கள் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு வாழ்கின்ற மக்கள் தாம் விரும்புகின்ற குழுவை ஆட்சி அதிகாரத்திற்கு தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறு இருப்பினும் இந்த யதார்த்தத்தை காணாத சக்திகள் இலங்கைக்கு பாரிய அழுத்தங்களை கொடுப்பதாக அவர் கூறினார். ‘சவால்களை எம்மால் வெற்றிகொள்ள முடியும். வெளிச் சக்திகள் அதற்கு தடையாக இருக்கின்றன’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.