இலங்கை அரசாங்கத்தை பாராளுமன்றில் எச்சரித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

இலங்கையில் தமிழர், முஸ்லிம்களின் உரிமைகளை அடையாளம் காணாத வரையில், இது சிங்கள நாடு என நினைத்துக்கொண்டுள்ள வரைக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச அரங்கில் பந்தாடப்பட்டுக்கொண்டே இருக்கும்.

தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை நிராகரித்து செயற்படும் வேளையில் உங்களின் அரசியல் விளையாட்டில் நீங்கள் கண்டிப்பாக சீரழிவீர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் அரசாங்கத்தை எச்சரித்தார்.

அமெரிக்கா அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தங்களை பிரயோகித்த காரணத்தினால் இலங்கை அரசாங்கம் சீனாவை சார்ந்தது. அதன் விளைவாக இன்று இலங்கைக்கு சுயாதீனமாக தீர்மானம் எடுக்க முடியாத அளவிற்கு சீனாவிடம் அடிபணிய வேண்டியுள்ளதாவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பூகோள ரீதியிலும்,கேந்திர ரீதியிலும் இலங்கை முக்கியமான இடத்தில் உள்ளதாகவும் ஆகவே இலங்கையை எவரும் கால்பந்தாக நினைத்து பந்தாடக்கூடாது எனவும் ஆளும் கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் உண்மையில் இதுதான் இலங்கையில் கொள்கையாக காணப்படுகின்றது.

கிழக்கின் கடற்படை தளம் ஒரு தரப்பினர்க்கும் ஏனைய பக்கம் இன்னொரு தர்பபினருக்கும் என பங்கிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இதுதான் இலங்கையில் இடம்பெற்று வருகின்றது. இலங்கையின் வெளிநாட்டு கொள்கையில் பல மாறுபாடுகள் வரலாறுகளில் காணப்பட்டன. 1948 ஆம் ஆண்டு வரையில் இலங்கையின் வெளிநாட்டு கொள்கையில் இந்தியாவை சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்ப்பதாக இருந்தது. ஏனென்றால் வடக்கு கிழக்கில் தமிழர்கள் அதிகம் என்பதால் இந்த நிலைமை காணப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து எதுவுமே சிந்திக்கப்படவில்லை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள் என்ற விடயம் பேசப்படுகின்ற நேரத்தில் இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்தது. அமெரிக்கா போன்ற நாடுகள் அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தங்களை பிரயோகித்த காரணத்தினால் இலங்கை அரசாங்கம் சீனாவை சார்ந்தது. அதன் விளைவாக இன்று இலங்கைக்கு சுயாதீனமாக தீர்மானம் எடுக்க முடியாத அளவிற்கு சீனாவின் பக்கம் சாய்ந்தது.

இந்த நாட்டின் சகோதர இனத்தின் உரிமைகளை மறந்து ஒரு இனத்தை சார்ந்து அரசாங்கம் சிந்திக்க நினைத்தது. ஆனால் இந்த நாட்டில் ஒரு இனம் மட்டும் அல்ல ஏனைய சமூகமும் உள்ளன, ஆனால் இந்த விடயத்தில் குடிகாரர்கள் போல் அரசாங்கம் நடந்துகொண்டது. இந்த நாட்டில் சிங்களவர்கள் போன்று தமிழ் முஸ்லிம்களும் உள்ளனர். ஆனால் அரசாங்கம் அதனை கருத்தில் கொள்ளவில்லை. மாறாக இலங்கையின் வளங்களை தாரைவார்த்தேனும் தப்பிக்க வேண்டும் என்பதற்காக சீனாவின் பக்கம் சாய்ந்தது. இந்த நாடு சிங்கள நாடு என்பதை மாத்திரமே அரசங்கம் கருத்தில் கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழர், முஸ்லிம்களின் உரிமைகளை அடையாளம் காணாத வரையில், இது சிங்கள நாடு என நினைத்துக்கொண்டுள்ள வரைக்கும் இலங்கை அரசாங்கம் பந்தாடப்பட்டுக்கொண்டே இருக்கும். அதிகளவில் எதிரிகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்களின் அரசியல் விளையாட்டில் நீங்கள் கண்டிப்பாக சீரழிவீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் தமிழர்களை பாதுகாத்தால் அதன் விளைவுகள் நம் அனைவருக்கும் ஆரோக்கியமனதாக அமையும், மாறாக இப்போது செய்யும் அதே தவறை செய்தால் நிச்சயமாக அதன் விளைவுகள் அரசாங்கத்தை நாசமாக்கும். சீனாவுடன் உறவு வேண்டாம் என நாம் கூறவில்லை ஆனால் இந்தியாவை, அமெரிக்காவை பகைத்துக்கொள்ள வேண்டாம். இந்த விளையாட்டில் மோசமான தோல்வியை சந்திப்பீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

Recommended For You

About the Author: Editor