இராணுவம் காணிகளை விடுவித்த போதும் மக்கள் மீள்குடியமர ஆர்வம் காட்டவில்லை – யாழ். தளபதி தெரிவிப்பு

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீள்குடியமர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனினும் மீதமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனர்”
இவ்வாறும் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பலாலி படைத் தலைமையகத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட இராணுவக் கட்டளைத் தளபதியிடம், எதிர்வரும் காலங்களில் காணி விடுவிப்பு தொடர்பாக ஏதாவது முன்னேற்றகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா?என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் றுவான் வணிகசூரிய மேலும் தெரிவித்ததாவது:

இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்டு பாதுகாப்புப் படையினரின் பாவனையில் இருந்து 8 ஆயிரத்து 800 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் 4 ஆயிரத்து 770 ஏக்கர் காணிகளுக்கு உரிமையாளர்கள் இல்லாத நிலையில் அவை தொடர்ந்தும் மக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளன. அந்தக் காணிகள் பற்றைக் காடுகளாக காணப்படுகின்றன.

காணிகளை விடுவிக்குமாறு போராட்டங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள், இராணுவத்தினர் அவற்றை விடுவிக்கப்பட்ட பின்னர் மீள்குடியமர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை.

குறிப்பாக 4 ஆயிரத்து 770 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் பற்றைக்காடாக கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றன. இது எமக்கு வேதனை அளிக்கின்றது. யாழ் மாவட்ட மக்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்த நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம். இதுவரை நூற்றுக்கு அதிகமான வீடுகளை கட்டி வழங்கியுள்ளோம். அது போல் மாணவர்களின் கல்வித் தேவைக்கு 5,500க்கு அதிகமான துவிச்சக்கரவண்டிகளை வழங்கியுள்ளோம்.

இராணுவம் எந்த எதிர்பார்ப்பும் இன்றியே இதனை செய்து வருகின்றது. இன்றும் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். குறிப்பாக பொதுமக்களின் காணிகளை முற்றாக விடுவிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னோக்கி செய்து வருகின்றோம். ஆனால் காணி உரிமையாளர்கள் வந்து மீளக்குடியமரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

நான் நினைக்கின்றேன் காணி உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். விடுவிக்கப்பட்;ட காணிகளில் மக்கள் மீள்குடியமரும் இடத்து இராணுவம் பல்வேறு உதவிகளை வழங்க தயாராக உள்ளது – என்றார்.

Recommended For You

About the Author: Editor