இராணுவப் பிரசன்னத்தால் வடக்குப் பெண்கள் பாதிப்பு, அமெரிக்க அதிகாரிக்கு விளக்கம்

CATHERINE-RUSSELLவடக்கு மாகாணத்தின் அதிகரித்த இராணுவப் பிரசன்னம் காரணமாகப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பெண்கள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் கத்தரின்ருசெல்லுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் அமைப்பினால் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு, நுழைவிசைவு (விஸா) மறுக்கப்பட்ட, கத்தரின்ருசெல் நேற்று முன்தினம் இரவு கொழும்பிலுள்ள அமெரிக்கன் நிலையத்தில், உள்ளூர் பெண்கள் உரிமை மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.

போருக்குப் பிந்திய சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், வடக்கில் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள சூழல்,போரினால் வாழ்க்கைத் துணையை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்துக்கு காத்திரமான உதவிகளை வழங்குதல், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாத்தல் என்பன குறித்து இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பெண்கள் அமைப்புக்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் பின்னர் பதிலளித்த ருசெல், இலங்கையை விமர்சிப்பதற்காகவே தான் அங்கு பயணம் செய்யவிருந்ததாகச் சிலர் எண்ணுவதாகவும், ஆனால் தனது நோக்கம் அது வல்ல என்றும் கூறியுள்ளார்.

Related Posts