இராணுவத்தினரும் விசாரணைக்கு உட்படுவர்; ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்

காணாமல் போனவர்கள் தொடர்பில் இராணுவம் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளுக்கு அதற்கான நேரம் அமையும் போது கட்டாயம் இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

missing-people-president

காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 7 அமர்வு 2ஆவது தடவையாக கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி மற்றும் கரைய்ச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு பதிவுகளை மேற்கொண்ட காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியப் பதிவுகள் கடந்த 4நாட்களாக நடைபெற்றது.

இறுதிநாளான இன்று சாட்சியப்பதிவுகளை அடுத்து சர்வதேச நிபுணர் குழு குறித்தும், இராணுவம் மீதான குற்றச்சாட்டிற்கு ஆணைக்குழுவின் நடவடிக்கை குறித்தும் ஊடகவியலாளர்கள் தலைவரிடம் கேள்வியெழுப்பி இருந்தனர்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதியால் நியமிக்கப்பட்ட காணாமல் போனவர் தொடர்பிலான சர்வதேச நிபுணர் குழுவினரும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் கலந்துரையாடலை அண்மையில் மேற்கொண்டிருந்தோம்.

அதன்படி அன்றைய கலந்துரையாடலில் மனித உரிமை சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எனினும் எங்களுடைய விசாரணைகளில் நேரடியாக பங்கு கொள்ள அவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

அவர்கள் விசாரணைகளில் தலையிடவோ அல்லது விசாரணைகளை நடாத்தவோ மாட்டார்கள் என்றும் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குபவர்களாகவே இருப்பார்கள்.

அதற்கமைய எப்போதும் அவர்களது ஆலோசனைகளை நாடுவோம். மேலும் மக்களது விசாரணைகள் நிறைவடைந்ததும் மக்களால் இராணுவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதற்கான நேரம் அமையும் போது இராணுவத்தினரும் கட்டாயம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.