இராணுவத்தினரின் தற்காலிக கொட்டகைகளால் மக்கள் அச்சம்

வசாவிளான் மேற்கு பகுதி தொடக்கம் அச்சுவேலி வரையான பிரதேசங்களில், சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உபகரணங்கள் மூலம் இராணுவத்தினரால் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அப்பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவர் எஸ்.சஜீவன் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்ற இராணுவத்தினர் முன்னெடுக்கும் நடவடிக்கையை வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு வன்மையாக கண்டிக்கின்றது. வளலாய் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களே, இன்னும் சொந்தக் காணிகளில் குடியேற்றப்படவில்லை.

அவ்வாறு இருக்கும் நிலையில், வலி வடக்கு மக்களை எவ்வாறு வளலாய்ப் பகுதியில் குடியேற்ற முடியும். உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்காகவே, இராணுவம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதனை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.