இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே வீதிகள் திறக்கப்படும்

yokeswarey-mayarநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினைச் சூழவுள்ள வீதிகளில் போடப்பட்டுள்ள வீதித்தடைகள் பகல் நேரத்தில் மட்டும் 12 மணி தொடக்கம் 2 மணி வரையிலும் அகற்றப்பட்டிருக்கும் என யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) ஆரம்பமாவதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் குறித்து விசேட ஊடகவியலாளர் கலந்துரையாடல் யாழ். மாநகர சபையில் திங்கட்கிழமை (28) மாலை இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே மாநகர முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கடந்த நல்லூர் திருவிழாக் காலங்களில் பகல் வேளைகளில் சில மணிநேரங்களும், இரவில் 9 மணிக்கு பின்னரும் நல்லூரினைச் சுற்றியுள்ள வீதித்தடைகள் அகற்றப்பட்டிருக்கும்.

ஆனால் இம்முறை இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, நல்லூர் ஆலயச் சூழலிலுள்ள கடைகளுக்கு பொருட்களைக் கொண்டு வருவதிற்காகவும், ஆலயச் சூழலிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பொருட்களைக் கொண்டு சென்று வருவதிற்காகவும் பகலில் இரண்டு மணி நேரம் மட்டும் வீதித் தடை அகற்றப்பட்டிருக்கும்.

இதனைத் தவிர்ந்த மற்றய நேரங்களில் வீதித் தடைகள் போடப்பட்டிருக்கும் என முதல்வர் மேலும் தெரிவித்தார்.

நல்லூரைச் சூழவுள்ள பருத்திதுறை வீதி, கோவில் வீதி அரசடி வீதி, முடமாவடி வீதி ஆகிய வீதிகளிலே இவ்வாறு வீதித்தடைகள் போடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.