ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் கடிதம்!

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என சாரப்பட – மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்குத் திடலாகப் பொது மக்களின் பாவனைக்குத் திறந்து விடப்பட்டிருந்தது.

ஆரியகுளப் புனரமைப்புப் பணிகளின் போது, மதச் சின்னங்களை நிறுவுவதில் இழுபறி நிலை தோன்றியிருந்த நிலையில், எந்தவொரு மத அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கட்டமைப்பெதனையும் அமைப்பதில்லை என மாநகர சபையில் தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது.

எனினும், அரசியலமைப்பின் படி மத அனுட்டானங்களைத் தடுக்கும் அதிகாரம் சபைக்கு இல்லை என சுட்டிக் காட்டியிருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஆரியகுளம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரித்து ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் மாநகர ஆணையாளரைப் பணித்திருக்கிறார்.

மேலும், சமயத்தைப் பின்பற்றும் உரிமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் தன்னைச் சந்திப்பதற்கு ஆலோசனை வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.

Recommended For You

About the Author: Editor