அவுஸ்திரேலியா திரும்புகிறார் ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு மத்தியில், அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பவுள்ளார். கடந்த புதன்கிழமை இடம்பெற்ற 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் முடிவிலேயே அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளார்.

steve smith

இதன்படி, அடுத்த 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் அதைத் தொடர்ந்துவரும் 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் ஸ்மித் பங்குபற்றமாட்டார். அவரின் இடத்தில், அணியின் தலைவராக டேவிட் வோணர் செயற்படவுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரொன்று, செப்டெம்பர் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதோடு, அதன் பின்னர் தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதால், அவருக்கு ஓய்வை வழங்கும் பொருட்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். அணியின் தலைவரான ஸ்மித், பயிற்றுநர் டெரன் லீமன், தேர்வாளர் றொட் மார்ஷ் ஆகியோர் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்மித் குறிப்பிட்டார்.

இலங்கைத் தொடரில் டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த அவுஸ்திரேலிய அணி, 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தோல்வியடைந்து, அத்தொடரில் 1-1 என்ற நிலையில் காணப்படுகின்ற நிலையிலேயே, இத்தொடரிலிருந்து ஸ்மித் விலகிச் செல்கிறார்.

இதேவேளை, இருபதுக்கு-20 தொடருக்கான குழாமில், விக்கெட் காப்பாளராக பீற்றர் நெவில் சேர்க்கப்படுவதோடு, சகலதுறை வீரரான கிளென் மக்வெல், துடுப்பாட்ட வீரர் கிறிஸ் லைன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor