அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் திறைசேரி செயலாளரால் குறிப்பிடப்பட்ட தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன் விதிகளின்படி அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று கடிதம் ஒன்றை அனுப்பி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

அதற்கமைய, மேற்படி சுற்று நிருபங்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், இதன் கீழ் மேற்கொள்ளப்படும் பொதுச் செலவினங்களுக்கு உரிய அமைச்சுச் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.