Ad Widget

அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டும் – மனோ

manoபொதுபல சேனையின் பொதுச்செயலர் ஞானசார தேரரை திட்டி தீர்ப்பதில் பயனில்லை. தான் என்ன செய்ய போகின்றேன் என்பதை பற்றி முன்னறிவித்தல் கொடுத்துதான் அனைத்தையும் அவர் செய்கிறார்.

நடந்துள்ள அட்டூழியங்களுக்கு, தட்டிக்கொடுத்து, யாமிருக்க பயமேன் என்று சொல்லி, இந்த பொதுபல சேனையை ஊட்டி வளர்க்கும் அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். இதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உணரவேண்டும். இந்த அரசுக்குள்ளே குடியிருக்கும் கோர்ட் சூட் அணிந்த முஸ்லிம் அமைச்சர்கள் இந்த அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டும். அது என்ன வைத்தியம் என நான் சொல்ல மாட்டேன். அதை தங்களுக்கு வாக்களித்து தெரிவு செய்த கிழக்கு, மத்திய, மேற்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம் மக்களிடமே, அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இவர்களுக்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் செய்யும் நிலைமை விரைவில் உருவாகலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று நடத்திய விசேட ஊடக மாநாட்டில் சிங்கள, ஆங்கில மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த அட்டூழியங்கள் தமிழர்களுக்கு புதிது அல்ல. இதையெல்லாம் வலியுடன் அனுபவித்தவர்கள் நாங்கள். எங்கள் சொத்துகளும் உயிர்களும் எங்கள் கண்கள் முன்னே பறிக்கப்பட்டன. எரித்து அழிக்கப்பட்டன. நடந்து முடிந்த யுத்த வெற்றியின் பிறகு நம்பிக்கையுடன் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சாப்பிட்டதாகவும், இன்று அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவும் ஐதேக மாகாணசபை உறுப்பினர் நண்பர் முஜிபுர் ரஹ்மான் இங்கே சொன்னார்.

யுத்தம் நின்றுவிட்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், நாங்கள் பட்டாசு கொளுத்தவில்லை. அந்த யுத்தம் நடத்தப்பட்ட முறையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாட்டை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில், இனவாத அடிப்படையில் நடத்தப்பட்ட யுத்தம் அது என்பது எங்களுக்கு தெரியும். அதனால்தான் அதே இனவாதம் இன்று அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதும் பாய்கிறது.

எனக்கு வலது புறத்தில் அமர்ந்துள்ள நண்பர் அஸாத் சாலி, கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் மீது பலத்த நம்பிக்கை வைத்திருந்தார். 2012ஆம் வருடம் எங்கள் பிரச்சினையின் மீது ஐநா மனித உரிமை பேரவையில் அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட வேளையில், அவர் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை அழைத்து கொண்டு அரசுக்கு ஆதரவாக காலி வீதியில் ஊர்வலம் போனார். ஆனால், அது நடந்து ஒருவாரத்தில் முதல் பள்ளிவாசல் இனவாதிகளால் அடித்து நொருக்கப்பட்டது. அத்துடன் அரசிலிருந்து அவரும் வெளியேறினார். இந்த அரசின் மீது முஸ்லிம் மக்களுக்கு இருந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்தது.

இன்று இந்த அரசில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதற்கு மேலும் அங்கு ஏன் இருக்கின்றார்களோ என எனக்கு தெரியவில்லை. போதும் என்ற நிலைமை இன்று உருவாகிவிட்டது. உள்ளே இருந்தபடி சில காரியங்கள் ஆற்றலாம் என்ற நிலைமை கடந்து விட்டது. இந்த அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது. அது நடந்தால்தான் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதிகளை அடக்கியே ஆக வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு ஏற்படும்.

இன்று தமிழர் பிரச்சினை உலக பிரச்சினையாகிவிட்டது. நீங்கள் நாடாளுமன்றத்தில் விவாதித்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, சர்வதேச விசாரணை நிச்சயம் நடக்கும் என்ற நிலைமை உருவாகிவிட்டது. உள்நாட்டில் நியாயம் இல்லையென்றால் நாங்கள் வெளிநாட்டுக்குதான் போவோம். அது எங்கள் உரிமை. அதை இன்று முஸ்லிம் மக்களும் செய்ய வேண்டும். ஐநா மனித உரிமை பேரவையில் அரசுக்கு ஆதரவாக முஸ்லிம் அரபு நாடுகளின் ஆதரவை பெற்று தந்தவர்கள், இனி தங்கள் பிரச்சினையை உலகிற்கு கொண்டு போக வேண்டும்.

எல்லாம் நடந்து முடிந்த பின், ‘சட்டத்தை கைகளில் எடுக்க எவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம்’ என நாட்டுத்தலைவர் சொல்கிறார். இது ஒரு நகைச்சுவை. இனி சட்டத்தில் என்ன மிச்சம் மிகுதி இருக்கிறது என்று நான் கேட்கிறேன். தாம் அதிகாரபூர்வமற்ற பொலிஸ் படையை அமைக்க போவதாக பொதுபல சேனையின் பொது செயலாளர் ஞானசார தேரர் சொல்லி நீண்ட நாட்களாகி விட்டது. இது ஒரு சட்ட விரோத பயங்கரவாத கருத்து. தான் என்ன செய்ய போகின்றேன் என்பதை பற்றி முன்னறிவித்தல் கொடுத்துதான் அனைத்தையும் அவர் செய்கிறார். அவர் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இன்று அந்த சட்ட விரோத போலிஸ் படைக்கு, சட்டபூர்வ போலிஸ் பயந்துகொண்டு இருக்கிறது. நாட்டை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு செயலாளர், இந்த சட்டவிரோத போலிஸ் படைக்கு பாதுகாப்பு கொடுக்கிறார். இவைதான் மறுக்கமுடியாத உண்மைகள்.

Related Posts