அரசியல் கைதி இராசையா ஆனந்தராசாவிற்கு விச ஊசி ஏற்றப்படவில்லை

தமிழ் அரசியல் கைதியான இராசையா ஆனந்தராசாவிற்கு விச ஊசி ஏற்றப்பட்டமைக்கான சாத்தியக் கூறுகள் காணப்படவில்லையென யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இராசையா ஆனந்தராசாவிற்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட வைத்திய பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தொடர்ச்சியாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமையே அவரை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மறுநாள் வியாழக்கிழமையே அவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை தாம் முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டத்தின்போது சிறைச்சாலை அதிகாரிகள் 6 போர் வலுக்கட்டாயமாக தன்னை பிடித்து ஊசி ஏற்றியதால் தான் உடல், உள ரீதியாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த இராசையா ஆனந்தராசாவை இன்னமும் மனநில மருத்துவரிடம் காண்பிக்கப்படவில்லை என இன்று அவரை சந்தித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து ஏற்றப்பட்ட ஊசி காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசையா ஆனந்தராசா தொடர்பான தகவலை முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனே வெளியிட்டிருந்தார். கடந்த ஆறாம் திகதி அவரை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேரடியாக சென்று சிவசக்தி ஆனந்தன் பார்வையிட்டும் இருந்தார்.

இந்த நிலையிலேயே நாடாளுமன்றில் இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக சிறைச்சாலையில் இருந்து வெளியேற்றி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாநாதன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கு அமைவாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இராசையா ஆனந்தராசா சிகிச்சை பெற்று வருகின்றார்.

Recommended For You

About the Author: Editor