அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி: பிரேரணை நிறைவேற்றம்

வடமாகாண அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரி வடமாகாண முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை கடும் வாத பிரதிவாதத்தின் பின்னர் சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (16) காலை கைதடியில் உள்ள வடமாகாண பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இம் அமர்விலேயே பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற அமர்வின் போது, வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய குழு ஒன்றை அமைத்து விசாரிக்க சபையின் அனுமதியினை கோரி  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

குறித்த பிரேரணை தொடர்பில் சபையில் கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. நீண்ட நேர வாத பிரதிவாதங்களை அடுத்து நேரம் போதாமையால், அன்றைய தினம் பிரேரணை தொடர்பான விவாதம் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்றைய தினமும் நீடித்தது. இன்றைய தினம் சுமார் ஐந்து மணி நேர விவாதத்தின் பின்னர் சிறு மாற்றத்துடன் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முதலமைச்சரினால் முன்னதாக கொண்டுவரப்பட்ட பிரேரணையில், 'அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டை விசாரிக்க குழு அமைக்க சபையில் அனுமதி கோருகிறேன்' என்பதனை, 'அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தீர்மானித்துள்ளேன்' என மாற்றம் செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Recommended For You

About the Author: Editor