வடக்கு-கிழக்கு மக்களின் அதிகப்படியான வாக்குகளால் நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவானீர்கள். தமிழ் மக்கள் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எதிர்பார்த் திருக்கிறார்கள்.
அதற்கான செயற்பாடுகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்த்திருக்கின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் வலியுறுத்தினார் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை.
இவ்வாண்டுக்கான முதலாவது ஆயர் பேரவை கடந்த வாரம் கண்டியில் கூடியது. இதன் பின்னர் இலங்கை ஆயர்கள் கொழும்பில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.
இதன்போது யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடினார்.
இனப் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தவேண்டியதன் அவசியம்
பற்றி யாழ். ஆயர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிரந்தர அரசியல் தீர்வு மட் டுமே என்றும் அவர் எடுத்துரைத்தார்.
நிரந்தரத் தீர்வை எட்டுவது என்பது சவால்கள் நிறைந்த கஷ்டமான பணியானாலும் நீங்கள் அதை உறுதியுடன் செயற்படுத்துவீர்கள் என நம்புவதாகவும் அவர் ஜனாதிபதியிடம் கூறினார்.
யாழ். ஆயர் ஜனாதிபதியிடம் மேலும் தெரிவித்தவை வருமாறு:
அரசினாலும் இராணுவத்தாலும் கைப்பற்றப்பட்ட தமிழர் நிலங்களை மீளக் கையளிப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சியை மனதாரப் பாராட்டுகிறேன்.
மக்களும் மகிழ்வுடன் சொந்த இடங்களில் குடியேறுவதைப் பார்க்க சந்தோசமாக உள்ளது. ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கையளிக்கும் திட்டத்தைத் தொடர்ந்து, வடக்கு-கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலங்களை விரைவில் விடுவிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் – என்று கூறினார்.
இவை குறித்து தான் அதிக அக்கறை செலுத்திச் செயற்படுவதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என்று யாழ். ஆயர் கூறினார்.