ஃபேஸ்புக்கில் போட துப்பாக்கியுடன் ‘செல்ஃபீ’ எடுத்து பரிதாபமாக பலியான டாக்டர்

இப்போதெல்லாம் சிலர் எங்கு சென்றாலும் செல்லிடத் தொலைபேசி கெமரா மூலம் தம்மைத்தாமே படம்பிடித்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் போன்றவர்கள்கூட இதில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தன்னைத்தானே படம்பிடித்துக்கொள்வது செல்ஃபீ (Sefie) என குறிப்பிடப்படுகிறது.

PAY-Oscar-Otero-Aguilar

மெக்சிகோவில் விலங்குகள் நல மருத்துவர் ஒருவர் ஃபேஸ்புக்கில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை அப்லோட் செய்ய நினைத்து போஸ் கொடுத்தபோது குண்டு வெடித்து பலியானார்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்தவர் ஆஸ்கர் ஒடீரோ அகுலெர்(21). விலங்குகள் நல மருத்துவர். அவருக்கு வகை வகையாக புகைப்படங்கள் எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.

சூப்பர் கார்கள், அழகிய பெண்கள், இசைக்குழுவுடன் புகைப்படம் எடுத்து அவற்றை ஃபேஸ்புக்கில் போட்ட அவருக்கு வித்தியாசமான யோசனை வந்தது. அதாவது துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் போட வேண்டும் என்று.

தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுடுவது போன்று போஸ் கொடுத்து செல்ஃபீ எடுக்கையில் தற்செயலாக துப்பாக்கி குண்டு ஆஸ்கர் மீது பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார் ஆஸ்கர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆஸ்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார்.