முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்!

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

த ஹலோ ரஸ்ட் (The Hallo Trust) மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களே இவ்வாறு கண்ணிவெடியில் சிக்கியுள்ளனர்.

நேற்று காலை முதல் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியது.

இதில் பரந்தனை சேர்ந்த 6 வயது பிள்ளையின் தாயாரான குனேந்திரன் ரேணுகா (வயது-25) என்பவரும், இவருக்கு அருகில் நின்ற மற்றுமொரு பெண் உத்தியோகத்தர் மேகலதா என்பவரும் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

சம்பவத்தை அடுத்து இருவரும் ஆரம்ப முதலுதவிகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor