ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரும் எழுச்சி பேரணி யாழில் ஆரம்பம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணி இன்று (சனிக்கிழமை) சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளரது.

யாழில் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி, முற்றவெளி வரை செல்லவுள்ளது. அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும், தமிழர்கள் விடயத்தில் ஐ.நா. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர்.

இந்த பேரணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு வடக்கு கிழக்கிலுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள் நலன் விரும்பிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய போராட்டம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை யாழ். பல்கலை மாணவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வட. மாகாணம் தழுவிய வாகன பவனி யாழில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

யாழ். மாவட்டம் முழுவதும் பயணித்த இந்த வாகன பவனி, அதனைத் தொடர்ந்து வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் சென்றிருந்தது.

இதனைத்தொடர்ந்து 19ஆம் திகதி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிழக்கில் முன்னெடுக்கப்டவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் குறித்த வாகன பவனி, கிழக்கு நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor