மக்களின் நலனை கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக செயற்பட முடிவு!!

அதிகார பகிர்வு தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக செயற்பட முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

பத்தரமுல்லவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இதன் போதே இரு கட்சிகளும் குறித்த நிலைப்பாட்டிற்கு வந்ததாக கலந்துரையாடலை அடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சம்பந்தன் கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “சமீபத்தில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் நிறைவேற்று அதிகார முறை கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், அதிகார பகிர்வு, தேர்தல் முறையில் மாற்றம் என்பன தொடர்பாக பேச்சுக்களை நடத்தினோம்.

அதிலும் அவற்றில் இரண்டில் கால தாமதம் ஏற்பட்டாலும் அதிகார பரவலாக்கத்தை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

அதன் பிரகாரம் குறித்த விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முகமாக இந்த சந்திப்பை நடத்தியிருந்தோம். அதற்கு அவர்கள் முழு சம்மதம் தெரிவித்தார்கள்” என கூறினார்.

Recommended For You

About the Author: Editor