திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கர்களை அச்சுருத்தும் வகையில் துண்டுப்பிரசுரம்

மன்னாரிலுள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுருத்தும் வகையில், திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் கருப்பு வெள்ளை மற்றும் கலர் வடிவிலான துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாக நேற்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன்போதே அப்பகுதியியை அண்மித்த பகுதிகளில் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

குறித்த துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “மன்னார் வாழ் மத வெறி குரோதம் பிடித்த கிறிஸ்தவ மத குருக்கள் மற்றும் ஒரு சில கிறிஸ்தவ மக்களாலேயே இலங்கை வாழ் தமிழ் மக்கள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது’.

இதற்கு சான்றாக கடந்த 3ஆம் திகதி திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலில், நடைபெற்ற அச்சுருத்தல் சம்பவம் யாவரும் அறிந்த ஒன்றேயாகும்.

மேலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதற்கு பதிலாக, இரண்டு தமிழ் அமைச்சர்கள் இங்கு மதம் சார்பாக செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளால் இந்து தமிழ் மக்களின் நகர்வு, வேறு பாதையை நோக்கி செல்லும். கிறிஸ்தவ மதவெறியர்களால் பாதிக்கப்படும் இந்து தமிழ்கள்” என அத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரம் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

மன்னார் திருக்கேதிஸ்வர ஆலயத்திற்கான நுழைவு பகுதிக்கு புதிதாக வரவேற்பு வளைவு அமைப்பது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்து மக்களுக்கும், கிறிஸ்தவ மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இந்த துண்டுப்பிரசுரம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor