பொது இடங்களில் வெடி கொளுத்துவது தவறாகும் – யாழ் நீதிமன்ற நீதிவான்

பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொளுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொளுத்துவதை ஏற்க முடியாது என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இருபாலைச் சந்திப்பகுதியில் பிரதான வீதியூடாகப் பயணித்த வேன் ஒன்றின் கண்ணாடிப் பகுதியில் வெடி வந்து வீழ்ந்ததால், கண்ணாடி முற்றாகச் சேதமடைந்தது.

அந்தப் பகுதியால் வந்த இறுதி ஊர்வலம் ஒன்றில் வெடிகொளுத்தப்பட்ட வெடியே வேன் மீது வீழ்ந்து அதன் கண்ணாடி முற்றாகச் சேதமடைந்தது.

இதனையடுத்து அந்த இறுதி ஊர்வலத்துடன் வெடி கொளுத்தி வந்த ஒருவரைக் கண்டுகொண்ட வேனின் உரிமையாளர், தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததுடன், தனது வேன் கண்ணாடியை மாற்றியமைப்பதற்கு 57 ஆயிரம் ரூபா பணத்தை வழங்குமாறும் வெடியுடன் வந்த நபரிடம் சாரதி கேட்டுள்ளார்.

எனினும் இரு தரப்புக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டாத்தால் வேன் சாரதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வெடியுடன் வந்த நபரின் ஒளிப்படத்தை சமர்ப்பித்து முறைப்பாடு வழங்கினார்.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரு தரப்பையும் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

“குற்றஞ்சாட்டப்பட்டவர்தான் வேன் மீது வெடிகொழுத்தி போட்டதற்கு ஆதாரம் இல்லை. அவர் வெடியை வைத்திருந்ததால் அவர் மீது பழிபோட முடியாது. வாகனத்துக்கு வெடிகொழுத்தி எறியவில்லை, அவ் வழியால் பயணித்ததால் வாகனத்தில் பட்டுவிட்டது” என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

“முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்ட ஒளிப்பட்டத்தில் வேறு எவருமே வெடி வைத்திருப்பதாக இல்லை.

பொது இடத்தில் – வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலத்தில் வெடிகொழுத்தும் போது பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது” என்று குற்றஞ்சாட்டப்பட்டவரை எச்சரித்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், வழக்கை ஒத்திவைத்தார்.

Recommended For You

About the Author: Editor