இறக்குமதி செய்யும் பால்மாவில் பன்றி எண்ணெய் கலந்துள்ளதா? – பாராளுமன்றத்தில் விவாதம்!

இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றி எண்ணெய், மரக்கறி எண்ணெய் கலந்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதா கவும் இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினூடாக ஆய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைத்தொழில் வாணிப பிரதி அமைச்சர் புத்திக பதிரண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பால்மா மாதிரிகளை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கினாலும் அந்த நிறுவனம் பாதியில் ஆய்வுகளை நிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எத்தகைய அழுத்தம் வந்தாலும் பால்மா என்ற பெயரில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் நச்சுப் பொருட்கள் கலந்த பால்மாக்கள் தொடர்பிலான உண்மையை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

வாய்மூல விடைக்காக விஜித ஹேரத் எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்கள் பலரும் கருத்து வெளியிட்டதோடு பன்றி எண்ணெய் கலப்பு விவகாரத்தால் மக்கள் பால்மா அருந்துவது தொடர்பில் பாரிய பிரச்சினை உருவாகும் எனவும் எனவே இது தொடர்பான உண்மை நிலையை வெளியிடுமாறும் கோரினர். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் புத்திக பதிரண, பால்மாவில் பன்றி எண்ணெய் கலப்பதாகவும் மரக்கறி எண்ணெய் மற்றும் பொருட்கள் கலப்பதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 1990 களில் வயம்ப பல்கலைக்கழகத்தினூடாக ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை பணம் செலுத்தி தனியார் நிறுவனம் ஒன்றினூாடாக விசாரணை நடத்தியது. ஆனால்,அந்த கம்பனி சில வாரங்களில் விசாரணையை பாதியில் கைவிட்டது. பால்மா கம்பனிகளின் அழுத்தம் காரணமாக விசாரணை கைவிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

சந்திம வீரக்கொடி எம்.பி

குழந்தைகளுக்கு நாம் பன்றி எண்ணெய் கலந்த பால்மாவைத் தான் கொடுக்கிறோமா என்ற அச்சம் எழுந்துள்ளது. 10 மாதங்களின் பின்னர் எமக்கு இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். அதற்கு முன்னதாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ். எம். மரிக்கார் எம்.பி

பால்மாவில் பன்றி எண்ணெய் கலந்திருக்கும் விவகாரத்தால் முஸ்லிம்களுக்கு பெரும் பிரச்சினை எழும். பன்றி எண்ணெய் கலந்த பால்மாவை பயன்படுத்துவது முஸ்லிம்களுக்கு பெரும் சிக்கலாக அமையும்.

பிரதி அமைச்சர் புத்திக பதிரண

பால்மா மாதிரிகளை பெற்று அங்கீகரிக்கப் பட்ட நிறுவனம் ஒன்றுக்கு வழங்க இருக்கிறோம். சுகாதார அமைச்சில் பணியாற்றிய சில சிரேஷ்ட அதிகாரிகள் பால்மா கம்பனிகளில் பெரிய சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினை தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

நாமல் ராஜபக்‌ஷ எம்.பி

விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை காத்திருக்காது அதற்கு முன்னதாக குறித்த பால்மாக்களுக்கு தடைவிதிக்கவோ குறித்த பால்மா வகைகளை அருந்த வேண்டாம் என அறிவூட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விமல் வீரவன்ச எம்.பி

பிரித்தானிய நிபுணர் குழுவொன்று பால்மா தொடர்பில் ஆய்வு செய்தது. குறித்த நிபுணர்களுக்கு எதிராக பால்மா கம்பனிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. பால்மா கம்பனிகளுக்கு 200 மில்லியன் ரூபா வரை வரிச்சலுகை வழங்கப்படுகையில் இது தொடர்பில் முழு விசாரணை நடத்த வேண்டும்.

Recommended For You

About the Author: Editor