அரசியல் தீர்வுகாணும் முயற்சி தோல்வியடைய கூட்டமைப்பே காரணம் என்கின்றார் மஹிந்தர்!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தோல்வி அடைந்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் தமிழ் செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிவகையில், “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று, செனட் சபையை உருவாக்குவதற்கு யோசனை முன்வைத்திருந்தோம். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் அரசியல் தீர்வை எட்டியிருக்கலாம்.

ஆனால், தீர்வை நோக்கிப் பயணிப்பதற்குரிய அக்கறை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கவில்லை. பேச்சுவார்த்தை மேசையில் வைத்து காலையில் ஒரு விடயத்தையும், மாலையில் வேறொரு விடயத்தையும் கூறிவந்தனர்.

ரணில் ஆட்சிக்கு வந்தால் தாம் கோருவதை அவர் தருவார் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. என்னுடன் இருந்த பகைமை காரணமாக ரணிலிடமிருந்து தீர்வைப் பெறவே கூட்டமைப்பினர் விரும்பினர்.

ஆனால், இன்று என்ன நடக்கின்றது? வடக்கில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியாதுள்ளது. ஏன் குடிப்பதற்கு சுத்தமான குடிதண்ணீர்கூட இல்லை.

வடக்கு மக்களுக்கு அரசு என்ன செய்கின்றது? இன்னும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனை உடன் நடத்துமாறு வடக்கு மாகாண சபை வலியுறுத்துகின்றதா? – இல்லை.

இலங்கை சிறிய நாடாகும். இங்கு தனிராஜ்ஜியம் குறித்து கதைப்பதறகு எவருக்கும் உரிமை இல்லை. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால், முதல்வரை கும்பிட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலை உருவாகும்.

நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் கீழ்மட்டத்திலிருந்து சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வு முன்வைக்கப்படும். நாம் மீண்டும் ஆட்சியமைக்க தமிழ் மக்களின் வாக்குகள் அவசியமில்லை என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் குறிப்பிடவில்லை.

12 ஆயிரத்து 500 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்தேன். காணிகளை விடுவித்தேன். அதேவேளை, அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதும் இன்னும் பரீசிலனை மட்டத்திலேயே இருந்து வருகிறது.

மேலும், அரசால் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்காவிட்டால் அதனை நிச்சயமாக நாம் எதிர்ப்போம்.”என கூறினார்.

Recommended For You

About the Author: Editor