சவேந்திர சில்வாவை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்த வேண்டும்: ஜஸ்மின் சூக்கா

யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் அமைப்பினால்நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகளையும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதற்கான போதுமான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இந்த ஆவணத்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

எனது குழுவினர் பல வருடங்களாகச் சேகரித்த பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு ஆதாரங்கள் இந்த ஆவணத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இலங்கை இராணுவத்தின் முக்கிய அதிகாரியாக சவேந்திர சில்வா தொடர்ந்தும் நீடிப்பதற்கான அவசியம் எதுவுமில்லை. எனவே சவேந்திர சில்வா உடனடியாகப் பதவியிலிருந்து அகற்றப்படவேண்டும்” என ஜஸ்மின் சூக்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் முப்படைகளின் பிரதானியான சவேந்திர சில்வாவிற்கு எதிரான யுத்தக் குற்றங்களை உள்ளடக்கிய ஆவணங்களை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னாபிரிக்காவை சேர்ந்த சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திற்கான அமைப்பு சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களை உள்ளடக்கிய 137 பக்க ஆவணமொன்றையே வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், யுத்தக்குற்றம் தொடர்பான புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் இலங்கையின் முப்படைகளின் பிரதானியான சவேந்திர சில்வா பதவிநீக்கம் செய்யப்பட வேண்டுமென குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor