நியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே?

கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்தை அடையும் முயற்சியில் சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மீன்பிடி படகான இந்த படகில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக பயணம் செய்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் கேரள காவற்துறையினரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பிரமாண்ட மீன்பிடி படகு புறப்பட்டு சென்ற பகுதியில் இருந்து 70 பொதிகள் மீட்கப்பட்டன. அந்த பைகளில் நீண்ட தூரத்துக்கு பயணம் செய்வதற்கான அத்தியாவசிய பொருட்கள் இருந்தன. மேலும் 20 அடையாள ஆவணங்களும் அந்த பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. அதை வைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் பிரபு தண்டபாணி என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருப்பதாக குறிபிடப்பட்டுள்ளது.

மீன்பிடி படகில் சட்டவிரோதமாகச் செல்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. டெல்லியைச் சேர்ந்தவர்களும் அந்த படகில் செல்வதாக கூறப்படுகிறது. 100 முதல் 200 பேர் வரை அந்த படகில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பெண்கள், குழந்தைகளும் அந்த படகில் இருக்கிறார்கள். 12-ந்தேதி இரவு புறப்பட்ட அந்த படகு நடுக்கடலுக்கு சென்றது. அதன் பிறகு அந்த படகு மாயமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த படகில் சட்டவிரோதமாகச் செல்பவர்கள் நியூசிலாந்து நாட்டை நோக்கி செல்வதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. கேரளாவில் இருந்து நியூசிலாந்துக்கு 7 ஆயிரம் மைல்கள் கடல் பயணம் செய்ய வேண்டும். அந்த பயணப்பாதை ஆபத்தானது என்று கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் அந்த கடல் மார்க்கத்தில் கடுமையான சூறாவளிகளும், கடல் கொந்தளிப்பும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்தோனேசியா, அஸ்ரேலியாவுக்கு இடையே அந்த படகு கடும் கடல் கொந்தளிப்பை சமாளிக்க வேண்டியது இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த படகில் செல்லும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது

Recommended For You

About the Author: Editor