போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்: ஜனாதிபதி

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான கட்டமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கட்டணமற்ற துரித தொலைபேசி இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 1984 என்ற இலக்கத்தினூடாக இந்த தகவல்களை வழங்க முடியும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பாக மட்டுமன்றி அக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் செயற்படும் தரப்பினர் தொடர்பான தகவல்களையும் நாட்டுக்கு வெளிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடந்த நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும்” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor