ஒற்றையாட்சியை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது: சித்தார்த்தன்!

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் ஒற்றையாட்சி முறைமையை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் அறிந்த வகையில் ஒற்றையாட்சி என்ற வகையிலேயே அரசியலமைப்பு வரைபு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் எதிர்காலத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா என்பது தொடர்பாகவும் தெரியாது.

ஆனால் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் ஒற்றையாட்சி முறைமையைக் கொண்டு வருவதே அவர்களின் தீர்மானமாக இருக்கின்றது.

இந்த நிலையில் நாம் இந்த அரசியலமைப்பு விடயத்தில் எமக்கான தீர்வை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்களால் கொண்டு வரப்படும் இத்தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான அல்லது ஒட்டுமொத்த கூட்டமைப்புமே தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும்.

இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எனினும் தற்போது தென்னிலங்கையில் காணப்படுகின்ற அரசியல் குழப்பநிலைகளால் இந்த அரசியலமைப்பு வரைபு தொடர்பில் எந்தளவு முன்னேற்றம் இருக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor