வைத்தியர் போல உடையணிந்து யாழ் போதனா வைத்தியசாலைக்குள் திருடி மாட்டிய யுவதி மீண்டும் கைவரிசை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சென்ற மாத தொடக்கத்தில் தங்க சங்கிலிகளை திருடிய போது மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண், மீணடும் நேற்று முன்தினமும் யாழ் போதனா வைத்தியசாலையில் தங்கச்சங்கிலியை அபேஸ் செய்தார் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைபவர்களின் தங்கச்சங்கிலிகளிற்கு உத்தரவாதம் கிடையாது என பொதுமக்கள் அச்சப்படுமளவிற்கு திருடர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்ததையடுத்து, வைத்தியசாலை நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

இம்மாதம் 4ம் திகதி சிசிரிவி கமராக்களின் உதவியுடன் தங்கச்சங்கிலி திருட்டில் ஈடுபடும் சிலர் அடையாளம் காணப்பட்டு, மட்டக்களப்பை சேர்ந்த அந்த யுவதி ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டார். பின்னர், வைத்தியசாலை உத்தியோகத்தர்களிற்கு டிமிக்கி விட்டுவிட்டு, காதலனுடன் தப்பி சென்றார். எனினும், தொலைபேசி வைத்தியசாலை நிர்வாகத்திடம் இருந்தது.

வைத்தியர்கள் போல ஆடை அணிந்தபடி, இதய துடிப்பு காட்டியை கழுத்தில் அணிந்தபடி அவர்கள் வைத்தியசாலைக்குள் சர்வசாதாரணமாக திரிந்தார்கள், சத்திரசிகிச்சை கூடத்திற்குள் நுழைந்தார்கள் என்றெல்லாம் வைத்தியசாலை நிர்வாகம் பரபரப்பு தகவல் வெளியிட்டது.

மடக்கிப்பிடிக்கப்பட்டவரின் கையடக்க தொலைபேசியில் பதிவாகியிருந்த அம்மா என்ற பெயரிலிருந்த இலக்கத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, தமது மகள் யாழில் வைத்தியத்துறையில் கற்பதாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

அந்த தொலைபேசி, மற்றும் சிசிரிவி காட்சிகள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இரண்டு நாட்களின் முன்பாக, போதனா வைத்தியசாலைக்கு வந்த வயோதிப் பெண்ணின் இரண்டு பவுண் சங்கிலி திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே திருடி மாட்டிக் கொண்ட யுவதியே இந்த திருட்டையும் செய்தது அம்பலமானது.

இது தொடர்பில் பொலிசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

அந்த யுவதியை வலைவீசி தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor