முல்லைத்தீவில் சிறுவனைக்கொண்டு குளோரின் கரைத்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் இந்துபுரம் கிராமத்தில் 9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

குறித்த பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ள நீர் கலந்த கிணறுகளை சுத்திகரிப்பதற்காக குளோரின் கரைப்பிக்கப்பட்டது. இந்த செயற்பாட்டிற்காக இரு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறித்த இருவரும், வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுவனை குளோரினை கரைக்குமாறும், பின்னர் கரைத்த குளோரினை கிணற்றில் விடுமாறும் கோரியுள்ளனர். அதன்படி அச்சிறுவனும் அவர்கள் குறிப்பிட்டவாறே குளோரினை கைகளால் கரைத்துள்ளான்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் அறிந்த சிறுவனின் பெற்றோர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட முல்லைத்தீவு அரசாங்க அதிபர், குறித்த விடயம் தொடர்பில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் விஜய ஐங்கரனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பொது சுகாதார பரிசோதகர் விஜய ஐங்கரன், இன்று காலை சம்பவம் தொடர்பில் 9 வயது சிறுவனிடமும், அவரின் பெற்றோருடனும் தொடர்புகொண்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

அத்தோடு, இந்த விசாரணை அறிக்கையை மாவட்ட அரசாங்க அதிபரிற்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த இரு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த பொது சுகாதார பரிசோதகர் ஐங்கரன், இதுபோன்று சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது என்றும் உறுதியளித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor