மைத்திரியுடன் இணைந்து பணியாற்றத் தயார் – ரணில்

ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்து நாளிதழிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போதும் இணைந்து பணியாற்ற தயாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க,

“எனக்கு அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை. இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேட்கவேண்டும். அரசியலமைப்பில் தனிப்பட்ட பாரபட்சங்களுக்கு இடமில்லை. நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

நாடாளுமன்றமே அதிஉயர் அதிகாரங்களை கொண்டது. இதனையே சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மையை நிரூபிப்பதற்கான போதிய எண்ணிக்கை உள்ளது. போதிய பெரும்பாண்மையில்லாததன் காரணமாகவே நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு அவர்கள் தயங்குகின்றனர்.

நாடாளுமன்றத்தினை கூட்டுவது தாமதமாவது எனக்கு கவலையளிக்கின்றது. இதன் காரணமாக நாடு மேலும் உறுதியற்ற நி்லையை நோக்கி தள்ளப்படுகின்றது. தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நாங்கள் நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வைக் காணுங்கள் என தெரிவிப்பார்கள். இந்திய நீதிமன்றங்களுக்கும் இலங்கை நீதிமன்றங்களிற்கும் இந்த விடயத்தில் வித்தியாசம் உள்ளன” என்றார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையயை நிரூபித்த பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள் என்ற கேள்விக்கு,

“புதிய அமைச்சரவையை அறிவிக்கவேண்டியிருக்கும். முன்னைய அமைச்சரவையில் இருந்த பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் இணைந்து கொண்டுள்ளனர்” என்று பதிலளித்தார்.

Recommended For You

About the Author: Editor