தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று(புதன்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம் ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதி சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவினர் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியுள்ளனர்.

இத்தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது எனவும், அத்தீர்மானங்களின் படியே தாம் செயற்படவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளனர்.

அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூக நிலைக்கு கொண்டுவருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பாக ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையை விரைவாக அடைவதற்கு தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ்வேண்டுகோளை தாம் கவனமாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor