பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் இரா.சம்பந்தன்!

நாட்டின் அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சந்தித்து இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, நாட்டின் இறையாண்மைக்கு இது பாதகமாக அமையுமென சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன், இறையாண்மையை பாதுகாக்க உடன் நாடாளுமன்றத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதனை செவிமடுத்த பிரதமர் மஹிந்த, இவ்விடயம் தொடர்பாக தாம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கம் பிளவுற்று கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் பிரதமராக பதவியேற்று மஹிந்த ராஜபக்ஷ, நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றார். இதனையடுத்து இரு பிரதான கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதேவேளை, ஐ.நா. பிரேரணையில் குறிப்பிட்டுள்ள நிலைமாறுகால நீதி பொறிமுறையை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் புதிய அரசியல் யாப்பு செயற்பாட்டை நிறைவேற்றல் ஆகியவற்றை செயற்படுத்த உத்தரவாதம் அளிக்கும் தரப்பிற்கே தமது ஆதரவென தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor