தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த சுன்னாகம் பொலிஸார் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேரையும் காயமடைந்தவர்கள் தரப்பில் இரண்டு பேர் உட்பட ஆறு நபர்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் மாலை 5.00 மணியளவில் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தினர்.

இதன்போது வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில் சட்டத்தரணிகளாக சுகாஸ், மணிவண்ணன், சுபாஸ், றோய் ஆகியோரும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரனும் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர் தலைப்பகுதியில் இரும்பு குழாயினால் தாக்கியுள்ளமையால் கொலை முயற்சி தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 300 கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரன் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இதன்போது இது தொடர்பாக ஆராயப்படும் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பு சட்டத்தரணிகளின் விவாதங்களையும் கேட்ட நீதிபதி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor