துமிந்த சில்வாவின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

பாரத லக்‌ஷ்மன் படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய தீர்ப்பாயம் வழங்கிய தூக்குத் தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தள்ளுபடி செய்தது.

இதன்மூலம் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதியானது. அத்துடன், பொலிஸ் கான்ஸ்டபிள் அனுர துஷார டி மெல்லை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் உயர் நீதிமன்றம் விடுவித்தது.

2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் தினமன்று அங்கொடை, முல்லேரியா பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுட்டுக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்பட12 நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) நியமிக்கப்பட்டது. தீர்ப்பாயம் முன் விசாரணைகள் இடம்பெற்று 2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் 8ஆம் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியது.

ஏழு சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்பட ஐந்து பேரும் குற்றவாளிகள் என்று இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரையும் சுட்டுக்கொலை செய்த குற்றத்துக்காக துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அவர்களில் 4 பேர் உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக கடந்த 2 ஆண்டுகளால் விசாரணைகள் இடம்பெற்றன.

மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் நேற்று (11) வியாழக்கிழமை வழங்கியது.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தெமட்டகொட சமிந்த மற்றும் சரத் பண்டார ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியது.

வழக்கின் முதலாவது பிரதிவாதியான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுர துஷார டி மெல்லை தண்டனைகள் அனைத்திலிருந்தும் உயர் நீதிமன்றம் விடுவித்தது.

Recommended For You

About the Author: Editor