அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் அலையென திரண்ட மக்கள்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனக்கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் 4 ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபயணம் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா நகரை சென்றடைந்தது.

இதன்போது வவுனியா மக்கள் தமிழ் அரசியல் கைதிகளுக்காக தமது ஆதரவையும் தெரிவித்து பெருந்திரளாக வவுனியா நகரில் கூடினர்.

ஓமந்தையிலிருந்து இன்று காலை ஆரம்பித்த நான்காவது நாள் பயணமானது வவுனியா நகரின் ஊடாக மதவாச்சி நோக்கி ஆரம்பமாகியிருந்தது.

அந்தவகையில், நொச்சிமோட்டை கனிஸ்ட உயர் தர பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று வரவேற்றிருந்ததுடன் வட. மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனும் நடைபயணத்தில் இணைந்திருந்தார்.

இந்நிலையில் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்திற்கு முன்பாக வவுனியா பொது அமைப்பின் பிரதிநிதிகள், வவுனியா தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள், தமிழீழ விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஈழவர் ஜனநாயக கட்சி, தமிழ் விருட்சம் அமைப்பினர், சிறிடெலோ கட்சியினர் உட்பட அரசியல் கட்சியின் உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம், பிரமண்டு பாடசாலையின் ஆசிரியர்கள், உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், அக்கினி சிறகுகள் அமைப்பினர், வவுனியா வர்த்தகர் சங்க பிரதிநிதிகள், வர்த்தகர் நலன்புரி சங்க பிரதிநிதிகள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் இந் நடைபயணத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்து முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் முச்சக்கரவண்டி பேரணியையும் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவாகளுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்திருந்தனர்.

நடைபயணமானது வவுனியா பசார் வீதி வழியாக சென்று மணிக்கூட்டு கோபுரத்தினை வந்தடைந்திருந்தபோது வவுனியாவில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் ஆகியோர் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய பதாதைகளைத் தாங்கியும் கோசங்களை எழுப்பியும் நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்ததுடன் அவர்களின் நடைபயணத்திலும் சில கிலோ மீற்றர்கள் இணைந்தது நடத்து தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

குறித்த நடை பயணமானது இன்று மதவாச்சி வரை பயணித்து தமது பயணத்தினை நிறுத்தி நாளை, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக நடை பயணத்தினை நிறைவுறுத்தவுள்ளது.

Recommended For You

About the Author: Editor