புதிய சட்டமூலம் அரசியல் கைதிகளைப் பாதிக்கக்கூடாது: சம்பந்தன்

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இழப்பீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. அவர்களால் வழங்கப்பட்ட வாக்குமூலங்களைத் தவிர எந்த ஆதாரமும் கிடையாது.

அநீதியான முறையில் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச கோட்பாடுகளுக்கு முரணானச் செயலாகும். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது கைதுசெய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டதுபோல் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்படவேண்டும். இதுவிடயத்தில் இழப்பீடுகள் குறித்த அலுவலகமும் கவனம் செலுத்த வேண்டும்.

அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலமானது தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படக்கூடாது.

குற்றம் இழைந்திருந்தாலும், புரிந்திருக்காவிட்டாலும் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor