யுத்தத்தை நிறுத்துமாறு மேற்கத்தேய நாடுகள் வலியுறுத்தின – மஹிந்த ஒப்புதல்

இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற பிரித்தானியா உட்பட மேற்கத்தேய நாடுகள் தீவிர முயற்சியை எடுத்த போதிலும் தான் அதற்கு இடம்கொடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்றது பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தமே தவிர அது இன ரீதியாகவோ அல்லது தமிழர்களுக்கு எதிராகவோ நடத்தப்படவில்லை என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் ‘விராட் ஹிந்துஸ்தான்’ சங்கம் சார்பில் டெல்லியில் ‘இந்தியா – இலங்கை உறவுகள் அதை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கான பாதை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இக்கருத்தரங்கில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மஹிந்த ராஜபக்ஷ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை ஒரு போதும் இன ரீதியிலான யுத்தமாக கருதக்கூடாது. தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை இராணுவம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் செயல்பாடானது இலங்கை எல்லையுடன் மட்டும் நிற்கவில்லை. இந்தியா வரை நீண்டது. இந்திய மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் பலரை அவர்கள் படுகொலை செய்தனர். இதை எப்போதும் மறக்க கூடாது.

தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்பது ஒரு இனத்தினருக்கு பயன் தரும் நடவடிக்கையாக பார்க்க கூடாது. அதனால் ஒட்டு மொத்த நாட்டிற்கும் நன்மை என்பதையே நோக்கவேண்டும்.

விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தம் தீவிரமாக நடைபெற்ற வேளையில் பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளரும் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சரும் என்னைத் தொடர்பு கொண்டு உடனடியாக யுத்தத்தை நிறுத்தும்படி வலியுறுத்தினர்.

ஆனால் அதை நிராகரித்து விட்டேன். அப்படி செய்தால் எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என நான் பதிலளித்தேன். இந்தியாவுடன் இணக்கமான நட்புறவை வைத்துக்கொள்வது மற்றும் இரு நாடுகளும் பரஸ்பரம் முழுவதும் புரிந்து கொள்வது ஆகியவையே எனது எதிர்கால வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor