தமிழர் பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – இரா.சம்பந்தன்

மகாவலி திட்டம் என்ற பெயரில், வடக்கு, கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டபின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மகாவலி திட்டம் என்ற பெயரில், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலிருந்து வேறு மக்களை கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும், அதற்கு தாம் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, நேற்று நாடுதிரும்பிய அவர், நாடாளுமன்றக் குழுவின் ஊடான தமது இந்திய பயணம் குறித்தும், பிரதமர் மோடியைச் சந்தித்தமைக் குறித்தும், கருத்துரைத்திருந்தார்.

இதன்போது, போர் முடிவுக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறினார்.

அத்துன், இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அரசமைப்பு அமையவேண்டும் என்றும், புதிய அரசமைப்பு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று இந்திய பிரதமரிடம் வலியுறுத்தியுதாகவும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor