படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம்

படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கிளிநாச்சி சேவை சந்தை முன்பாக இந்த ஆரப்பாட்டம் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.

சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில், கிராம மட்ட அமைப்புக்களும் கலந்து கொண்டன.

கிளிநொச்சி சேவை சந்தைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி பொலிஸ் நிலையம் வரை பேரணியாக சென்றனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபருக்கான மகஜர் ஒன்றை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் குறிப்பிடுகையில்,

“கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நித்தியாவிற்கு நீதி கிடைக்க வேண்டும்.

குறித்த செயலை செய்த குற்றவாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்ய வேண்டும். அத்துடன் மாவட்டத்தில் காணப்படும் குற்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் குறிப்பிடுகையில், “பெண்களிற்கெதிராக தொடர்ச்சியாக கொடுமைகள் இடம்பெற்று வருகின்றது. அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை மாவட்டத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்டவற்றை விரைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Recommended For You

About the Author: Editor